திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருவெண்காடு தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 61வது திருப்பதிகம்)

2.61 திருவெண்காடு

பண் - காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

உண்டாய் நஞ்சை உமையோர் பங்கா என்றுள்கித்	
தொண்டாய்த் திரியும் அடியார் தங்கள் துயரங்கள்	
அண்டா வண்ணம் அறுப்பான் எந்தை ஊர்போலும்	
வெண்டா மரைமேற் கருவண் டியாழ்செய் வெண்காடே.	2.61.1
	
நாதன் நம்மை ஆள்வான் னென்று நவின்றேத்திப்	
பாதம் பன்னால் பணியும் அடியார் தங்கள்மேல்	
ஏதந் தீர இருந்தான் வாழும் ஊர்போலும்	
வேதத் தொலியாற் கிளிசொல் பயிலும் வெண்காடே. 	2.61.2
	
தண்முத் தரும்பத் தடமூன் றுடையான் றனையுன்னிக்	
கண்முத் தரும்பக் கழற்சே வடிகை தொழுவார்கள்	
உண்முத் தரும்ப வுவகை தருவான் ஊர்போலும்	
வெண்முத் தருவிப் புனல்வந் தலைக்கும் வெண்காடே. 	2.61.3
	
நரையார் வந்து நாளுங் குறுகி நணுகாமுன்	
உரையால் வேறா வுள்கு வார்கள் உள்ளத்தே	
கரையா வண்ணங் கண்டான் மேவும் ஊர்போலும்	
விரையார் கமலத் தன்னம் மருவும் வெண்காடே. 	2.61.4
	
பிள்ளைப் பிறையும் புனலுஞ் சூடும் பெம்மானென்	
றுள்ளத் துள்ளித் தொழுவார் தங்கள் உறுநோய்கள்	
தள்ளிப் போக அருளுந் தலைவன் ஊர்போலும்	
வெள்ளைச் சுரிசங் குலவித் திரியும் வெண்காடே. 	2.61.5
	
ஒளிகொள் மேனி யுடையாய் உம்ப ராளீயென்	
றளிய ராகி அழுதுற் றூறும் அடியார்கட்	
கெளியான் அமரர்க் கரியான் வாழும் ஊர்போலும்	
வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே. 	2.61.6
	
கோள்வித் தனைய கூற்றந் தன்னைக் குறிப்பினால்	
மாள்வித் தவனை மகிழ்ந்தங் கேத்த மாணிக்காய்	
ஆள்வித் தமரர் உலகம் அளிப்பான் ஊர்போலும்	
வேள்விப் புகையால் வானம் இருள்கூர் வெண்காடே. 	2.61.7
	
வளையார் முன்கை மலையாள் வெருவ வரையூன்றி	
முளையார் மதியஞ் சூடி யென்று முப்போதும்	
இளையா தேத்த இருந்தான் எந்தை ஊர்போலும்	
விளையார் கழனிப் பழனஞ் சூழ்ந்த வெண்காடே. 	2.61.8
	
கரியா னோடு கமல மலரான் காணாமை	
எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் என்பார்கட்	
குரியான் அமரர்க் கரியான் வாழும் ஊர்போலும்	
விரியார் பொழிலின் வண்டு பாடும் வெண்காடே. 	2.61.9
	
பாடும் அடியார் பலருங் கூடிப் பரிந்தேத்த	
ஆடும் அரவம் அசைத்த பெருமான் அறிவின்றி	
மூடம் உடைய சமண்சாக் கியர்கள் உணராத	
வேடம் உடைய பெருமான் பதியாம் வெண்காடே. 	2.61.10
	
விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக்	
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்	
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்	
கடையா வினைகள் அமர லோகம் ஆள்வாரே. 	2.61.11

	        - திருச்சிற்றம்பலம் -


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page