திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருப்பாசூர் தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 60வது திருப்பதிகம்)

2.60 திருப்பாசூர்

பண் - காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

சிந்தை யிடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார்	
வந்து மாலை வைகும் போழ்தென் மனத்துள்ளார்	
மைந்தர் மணாள ரென்ன மகிழ்வா ரூர்போலும்	`
பைந்தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே.	2.60.1
	
பேரும் பொழுதும் பெயரும் பொழுதும் பெம்மானென்	
றாருந் தனையும் அடியா ரேத்த அருள்செய்வார்	
ஊரும் அரவம் உடையார் வாழும் ஊர்போலும்	
பாரின் மிசையார் பாட லோவாப் பாசூரே.	2.60.2
	
கையால் தொழுது தலைசாய்த் துள்ளங் கசிவார்கள்	
மெய்யார் குறையுந் துயருந் தீர்க்கும் விமலனார்	
நெய்யா டுதலஞ் சுடையார் நிலாவும் ஊர்போலும்	
பைவாய் நாகங் கோட லீனும் பாசூரே.	2.60.3
	
பொங்கா டரவும் புனலுஞ் சடைமேல் பொலிவெய்தக்	
கொங்கார் கொன்றை சூடியென் னுள்ளங் குளிர்வித்தார்	
தங்கா தலியுந் தாமும் வாழும் ஊர்போலும்	
பைங்கான் முல்லை பல்லரும் பீனும் பாசூரே.	2.60.4
	
ஆடற் புரியும் ஐவா யரவொன் றரைச்சாத்தும்	
சேடச் செல்வர் சிந்தையு ளென்றும் பிரியாதார்	
வாடற் றலையிற் பலிதேர் கையார் ஊர்போலும்	
பாடற் குயில்கள் பயில்பூஞ் சோலைப் பாசூரே.	2.60.5
	
கானின் றதிரக் கனல்வாய் நாகம் கச்சாகத்	
தோலொன் றுடையார் விடையார் தம்மைத் தொழுவார்கள்	
மால்கொண் டோ ட மையல் தீர்ப்பார் ஊர்போலும்	
பால்வெண் மதிதோய் மாடஞ்சூழ்ந்த பாசூரே.	2.60.6
	
கண்ணின் அயலே கண்ணொன் றுடையார் கழலுன்னி	
எண்ணுந் தனையும் அடியா ரேத்த அருள்செய்வார்	
உண்ணின் றுருக உவகை தருவார் ஊர்போலும்	
பண்ணின் மொழியார் பாட லோவாப் பாசூரே.	2.60.7
	
தேசு குன்றாத் தெண்ணீ ரிலங்கைக் கோமானைக்	
கூச அடர்த்துக் கூர்வாள் கொடுப்பார் தம்மையே	
பேசிப் பிதற்றப் பெருமை தருவார் ஊர்போலும்	
பாசித் தடமும் வயலும் சூழ்ந்த பாசூரே.	2.60.8

நகுவாய் மலர்மேல் அயனும் நாகத் தணையானும்	
புகுவா யறியார் புறம்நின் றோரார் போற்றோவார்	
செகுவாய் உகுபற் றலைசேர் கையார் ஊர்போலும்	
பகுவாய் நாரை ஆரல் வாரும் பாசூரே.	2.60.9

தூய வெயில்நின் றுழல்வார் துவர்தோய் ஆடையர்	
நாவில் வெய்ய சொல்லித் திரிவார் நயமில்லார்	
காவல் வேவக் கணையொன் றெய்தார் ஊர்போலும்	
பாவைக் குரவம் பயில்பூஞ் சோலைப் பாசூரே.	2.60.10

ஞானம் உணர்வான் காழி ஞான சம்பந்தன்
தேனும் வண்டும் இன்னிசை பாடுந் திருப்பாசூர்க்	
கானம் முறைவார் கழல்சேர் பாடல் இவைவல்லார்	
ஊனம் இலராய் உம்பர் வானத் துறைவாரே.	2.60.11

	        - திருச்சிற்றம்பலம் -
  • இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பாசூர்நாதர், தேவியார் - பசுபதிநாயகியம்மை.


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page