திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
சீகாழி தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 59வது திருப்பதிகம்)

2.59 சீகாழி

பண் - காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

நலங்கொள் முத்தும் மணியும் அணியுந் திரளோதங்	
கலங்கள் தன்னிற் கொண்டு கரைசேர் கலிக்காழி	
வலங்கொள் மழுவொன் றுடையாய் விடையா யெனஏத்தி	`
அலங்கல் சூட்ட வல்லார்க் கடையா அருநோயே.	2.59.1

ஊரார் உவரிச் சங்கம் வங்கங் கொடுவந்து	
காரார் ஓதங் கரைமேல் உயர்த்துங் கலிக்காழி	
நீரார் சடையாய் நெற்றிக் கண்ணா என்றென்று	
பேரா யிரமும் பிதற்றத் தீரும் பிணிதானே.	2.59.2

வடிகொள் பொழிலில் மழலை வரிவண் டிசைசெய்யக்	
கடிகொள் போதில் தென்றல் அணையுங் கலிக்காழி	
முடிகொள் சடையாய் முதல்வா என்று முயன்றேத்தி	
அடிகை தொழுவார்க் கில்லை அல்லல் அவலமே.	2.59.3

மனைக்கே யேற வளஞ்செய் பவளம் வளர்முத்தங்	
கனைக்குங் கடலுள் ஓதம் ஏறுங் கலிக்காழிப்	
பனைக்கைப் பகட்டீர் உரியாய் பெரியா யெனப்பேணி	
நினைக்க வல்ல அடியார் நெஞ்சில் நல்லாரே.	2.59.4

பரிதி யியங்கும் பாரிற் சீரார் பணியாலே	
கருதி விண்ணோர் மண்ணோர் விரும்புங் கலிக்காழிச்	
சுருதி மறைநான் கான செம்மை தருவானைக்	
கருதி யெழுமின் வழுவா வண்ணந் துயர்போமே.	2.59.5

மந்த மருவும் பொழிலில் எழிலார் மதுவுண்டு	
கந்த மருவ வரிவண் டிசைசெய் கலிக்காழிப்	
பந்த நீங்க அருளும் பரனே யெனஏத்திச்	
சிந்தை செய்வார் செம்மை நீங்கா திருப்பாரே.	2.59.6

புயலார் பூமி நாமம் ஓதிப் புகழ்மல்கக்	
கயலார் கண்ணார் பண்ணார் ஒலிசெய கலிக்காழிப்	
பயில்வான் தன்னைப் பத்தி யாரத் தொழுதேத்த	
முயல்வார் தம்மேல் வெம்மைக் கூற்ற முடுகாதே.	2.59.7

அரக்கன் முடிதோள் நெரிய அடர்த்தான் அடியார்க்குக்	
கரக்க கில்லா தருள்செய் பெருமான் கலிக்காழிப்	
பரக்கும் புகழான் தன்னை யேத்திப் பணிவார்மேல்	
பெருக்கும் இன்பந் துன்ப மான பிணிபோமே.	2.59.8

மாணா யுலகங் கொண்ட மாலும் மலரோனுங்	
காணா வண்ணம் எரியாய் நிமிர்ந்தான் கலிக்காழிப்	
பூணார் முலையாள் பங்கத் தானைப் புகழ்ந்தேத்திக்	
கோணா நெஞ்சம் உடையார்க் கில்லைக் குற்றமே.	2.59.9

அஞ்சி யல்லல் மொழிந்து திரிவார் அமண்ஆதர்	
கஞ்சி காலை யுண்பார்க் கரியான் கலிக்காழித்	
தஞ்ச மாய தலைவன் தன்னை நினைவார்கள்	
துஞ்ச லில்லா நல்ல வுலகம் பெறுவாரே. 2.59.10

ஊழி யாய பாரில் ஓங்கும் உயர்செல்வக்	
காழி யீசன் கழலே பேணுஞ் சம்பந்தன்	
தாழும் மனத்தால் உரைத்த தமிழ்கள் இவைவல்லார்	
வாழி நீங்கா வானோ ருலகில் மகிழ்வாரே.	2.59.11

	        - திருச்சிற்றம்பலம் -


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page