திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருக்குடவாயில் தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 58வது திருப்பதிகம்)

2.58 திருக்குடவாயில்

பண் - காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

கலைவாழும் அங்கையீர் கொங்கையாருங் கருங்கூந்தல்	
அலைவாழுஞ் செஞ்சடையில் அரவும்பிறையும் அமர்வித்தீர்	
குலைவாழை கமுகம்பொன் பவளம்பழுக்குங் குடவாயில்	`
நிலைவாழுங் கோயிலே கோயிலாக நின்றீரே.	2.58.1

அடியார்ந்த பைங்கழலுஞ் சிலம்பும்ஆர்ப்ப அங்கையில்	
செடியார்ந்த வெண்டலையொன் றேந்தியுலகம் பலிதேர்வீர்	
குடியார்ந்த மாமறையோர் குலாவியேத்துங் குடவாயில்	
படியார்ந்த கோயிலே கோயிலாகப் பயின்றீரே.	2.58.2

கழலார்பூம் பாதத்தீர் ஓதக்கடலில் விடமுண்டன்	
றழலாருங் கண்டத்தீர் அண்டர்போற்றும் அளவினீர்	
குழலார வண்டினங்கள் கீதத்தொலிசெய் குடவாயில்	
நிழலார்ந்த கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.	2.58.3

மறியாருங் கைத்தலத்தீர் மங்கைபாக மாகச்சேர்ந்	
தெறியாரும் மாமழுவும் எரியுமேந்துங் கொள்கையீர்	
குறியார வண்டினங்கள் தேன்மிழற்றுங் குடவாயில்	
நெறியாருங் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.	2.58.4

இழையார்ந்த கோவணமுங் கீளும்எழிலார் உடையாகப்	
பிழையாத சூலம்பெய் தாடல்பாடல் பேணினீர்	
குழையாரும் பைம்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த குடவாயில்	
விழவார்ந்த கோயிலே கோயிலாக மிக்கீரே.	2.58.5

அரவார்ந்த திருமேனி யானவெண்ணீ றாடினீர்	
இரவார்ந்த பெய்பலிகொண் டிமையோரேத்த நஞ்சுண்டீர்	
குரவார்ந்த பூஞ்சோலை வாசம்வீசுங் குடவாயில்	
திருவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே.	2.58.6

பாடலார் வாய்மொழியீர் பைங்கண்வெள்ளே றூர்தியீர்	
ஆடலார் மாநடத்தீர் அரிவைபோற்றும் ஆற்றலீர்	
கோடலார் தும்பிமுரன் றிசைமிழற்றுங் குடவாயில்	
நீடலார் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.	2.58.7

கொங்கார்ந்த பைங்கமலத் தயனுங்குறளாய் நிமிர்ந்தானும்	
அங்காந்து தள்ளாட அழலாய்நிமிர்ந்தீர் இலங்கைக்கோன்	
தங்காதல் மாமுடியுந் தாளும் அடர்த்தீர் குடவாயில்	
பங்கார்ந்த கோயிலே கோயிலாகப் பரிந்தீரே.	2.58.8

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.	2.58.9

தூசார்ந்த சாக்கியருந் தூய்மையில்லாச் சமணரும்	
ஏசார்ந்த புன்மொழிநீத் தெழில்கொள்மாடக் குடவாயில்	
ஆசாரஞ் செய்மறையோர் அளவிற்குன்றா தடிபோற்றத்	
தேசார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.	2.58.10

நளிர்பூந் திரைமல்கு காழிஞான சம்பந்தன்	
குளிர்பூங் குடவாயிற் கோயில்மேய கோமானை	
ஒளிர்பூந் தமிழ்மாலை உரைத்தபாடல் இவைவல்லார்	
தளர்வான தானொழியத் தகுசீர்வானத் திருப்பாரே.	2.58.11

	        - திருச்சிற்றம்பலம் -


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page