திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருநல்லூர் தேவாரப் பதிகம்

(இரண்டாம் திருமுறை 57வது திருப்பதிகம்)

2.57 திருநல்லூர்

பண் - காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

பெண்ணமருந் திருமேனி யுடையீர்பிறங்கு சடைதாழப்	
பண்ணமரும் நான்மறையே பாடியாடல் பயில்கின்றீர்	
திண்ணமரும் பைம்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர்	`
மண்ணமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.	2.57.1

அலைமல்கு தண்புனலும் பிறையுஞ்சூடி அங்கையில்	
கொலைமல்கு வெண்மழுவும் அனலுமேந்துங் கொள்கையீல்	
சிலைமல்கு வெங்கணையாற் புரமூன்றெரித்தீர் திருநல்லூர்	
மலைமல்கு கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.	2.57.2

குறைநிரம்பா வெண்மதியஞ் சூடிக்குளிர்புன் சடைதாழப்	
பறைநவின்ற பாடலோ டாடல்பேணிப் பயில்கின்றீர்	
சிறைநவின்ற தண்புனலும் வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர்	
மறைநவின்ற கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.	2.57.3

கூனமரும் வெண்பிறையும் புனலுஞ்சூடுங் கொள்கையீர்	
மானமரும் மென்விழியாள் பாகமாகும் மாண்பினீர்	
தேனமரும் பைம்பொழிலின் வண்டுபாடுந் திருநல்லூர்	
வானமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.	2.57.4

நிணங்கவரும் மூவிலையும் அனலுமேந்தி நெறிகுழலாள்	
அணங்கமரும் பாடலோ டாடல்மேவும் அழகினீர்	
திணங்கவரும் ஆடரவும் பிறையுஞ்சூடித் திருநல்லூர்	
மணங்கமழுங் கோயி லே கோயிலாக மகிழ்ந்தீரே.	2.57.5

கார்மருவு பூங்கொன்றை சூடிக்கமழ்புன் சடைதாழ	
வார்மருவு மென்முலையாள் பாகமாகும் மாண்பினீர்	
தேர்மருவு நெடுவீதிக் கொடிகளாடுந் திருநல்லூர்	
ஏர்மருவு கோயிலே கோயிலாக இருந்தீரே.	2.57.6

ஊன்தோயும் வெண்மழுவும் அனலுமேந்தி உமைகாண	
மீன்தோயுந் திசைநிறைய வோங்கியாடும் வேடத்தீர்	
தேன்தோயும் பைம்பொழிலின் வண்டுபாடுந் திருநல்லூர்	
வான்தோயுங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.	2.57.7

காதமரும் வெண்குழையீர் கறுத்தஅரக்கன் மலையெடுப்ப	
மாதமரும் மென்மொழியாள் மறுகும்வண்ணங் கண்டுகந்தீர்	
தீதமரா அந்தணர்கள் பரவியேத்துந் திருநல்லூர்	
மாதமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.	2.57.8

போதின்மேல் அயன்திருமால் போற்றியும்மைக் காணாது	
நாதனே இவனென்று நயந்தேத்த மகிழ்ந்தளித்தீர்	
தீதிலா அந்தணர்கள் தீமூன்றோம்புந் திருநல்லூர்	
மாதராள் அவளோடு மன்னுகோயில் மகிழ்ந்தீரே.	2.57.9

பொல்லாத சமணரொடு புறங்கூறுஞ் சாக்கியரொன்	
றல்லாதார் அறவுரைவிட் டடியார்கள் போற்றோவா	
நல்லார்கள் அந்தணர்கள் நாளுமேத்துந் திருநல்லூர்	
மல்லார்ந்த கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.	2.57.10
	
கொந்தணவும் பொழில்புடைசூழ் கொச்சைமேவு குலவேந்தன்	
செந்தமிழின் சம்பந்தன் சிறைவண்புனல்சூழ் திருநல்லூர்ப்	
பந்தணவு மெல்விரலாள் பங்கன்றன்னைப் பயில்பாடல்	
சிந்தனையா லுரைசெய்வார் சிவலோகஞ்சேர்ந் திருப்பாரே.	2.57.11

	        - திருச்சிற்றம்பலம் -


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page