திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருவிடைமருதூர் தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 56வது திருப்பதிகம்)

2.56 திருவிடைமருதூர்

பண் - காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

பொங்குநூல் மார்பினீர் பூதப்படையீர் பூங்கங்கை	
தங்குசெஞ் சடையினீர் சாமவேதம் ஓதினீர்	
எங்குமெழிலார் மறையோர்கள் முறையாலேத்த இடைமருதில்	`
மங்குல்தோய் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.	2.56.1
	
நீரார்ந்த செஞ்சடையீர் நெற்றித்திருக்கண் நிகழ்வித்தீர்	
போரார்ந்த வெண்மழுவொன் றுடையீர் பூதம்பாடலீர்	
ஏரார்ந்த மேகலையாள் பாகங்கொண்டீர் இடைமருதில்	
சீரார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே	2.56.2
	
அழல்மல்கும் அங்கையி லேந்திப்பூதம் அவைபாடச்	
சுழல்மல்கும் ஆடலீர் சுடுகாடல்லாற் கருதாதீர்	
எழில்மல்கு நான்மறையோர் முறையாலேத்த இடைமருதில்	
பொழில்மல்கு கோயிலே கோயிலாகப் பொலிந்தீரே	2.56.3
	
பொல்லாப் படுதலையொன் றேந்திப்புறங் காட்டாடலீர்	
வில்லாற் புரமூன்றும் எரித்தீர்விடை யார்கொடியினீர்	
எல்லாக் கணங்களும் முறையாலேத்த இடைமருதில்	
செல்வாய கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.	2.56.4
	
வருந்திய மாதவத்தோர் வானோரேனோர் வந்தீண்டிப்	
பொருந்திய தைப்பூச மாடியுலகம் பொலிவெய்தத்	
திருந்திய நான்மறையோர் சீராலேத்த இடைமருதில்	
பொருந்திய கோயிலே கோயிலாகப் புக்கீரே.	2.56.5
	
சலமல்கு செஞ்சடையீர் சாந்தநீறு பூசினீர்	
வலமல்கு வெண்மழுவொன் றேந்திமயானத் தாடலீர்	
இலமல்கு நான்மறையோ ரினிதாயேத்த இடைமருதில்	
புலமல்கு கோயிலே கோயிலாகப் பொலிந்தீரே.	2.56.6

புனமல்கு கொன்றையீர் புலியின்அதளீர் பொலிவார்ந்த	
சினமல்கு மால்விடையீர் செய்யீர்கரிய கண்டத்தீர்	
இனமல்கு நான்மறையோ ரேத்துஞ்சீர்கொள் இடைமருதில்	
கனமல்கு கோயிலே கோயிலாகக் கலந்தீரே.	2.56.7
	
சிலையுய்த்த வெங்கணையாற் புரமூன்றெரித்தீர் திறலரக்கன்	
தலைபத்துந் திண்தோளும் நெரித்தீர்தையல் பாகத்தீர்	
இலைமொய்த்த தண்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த இடைமருதில்	
நலமொய்த்த கோயிலே கோயிலாக நயந்தீரே.	2.56.8

மறைமல்கு நான்முகனும் மாலும்அறியா வண்ணத்தீர்	
கறைமல்கு கண்டத்தீர் கபாலமேந்து கையினீர்	
அறைமல்கு வண்டினங்கள் ஆலுஞ்சோலை இடைமருதில்	
நிறைமல்கு கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.	2.56.9

சின்போர்வைச் சாக்கியரும் மாசுசேருஞ் சமணரும்	
துன்பாய கட்டுரைகள் சொல்லியல்லல் தூற்றவே	
இன்பாய அந்தணர்கள் ஏத்தும்ஏர்கொள் இடைமருதில்	
அன்பாய கோயிலே கோயிலாக அமர்ந்தீரே.	2.56.10

கல்லின் மணிமாடக் கழுமலத்தார் காவலவன்	
நல்ல அருமறையான் நற்றமிழ்ஞான சம்பந்தன்	
எல்லி இடைமருதில் ஏத்துபாட லிவைபத்துஞ்	
சொல்லு வார்க்குங் கேட்பார்க்குந் துயரமில்லையே.	2.56.11

	        - திருச்சிற்றம்பலம் -


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page