திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருக்கோட்டாறு தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 52வது திருப்பதிகம்)

2.52 திருக்கோட்டாறு

பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

கருந்த டங்கணின் மாத ராரிசை	
  செய்யக் காரதிர் கின்ற பூம்பொழிற்	
குருந்த மாதவியின் விரைமல்கு கோட்டாற்றில்	
இருந்த எம்பெரு மானை யுள்கி	
  இணையடி தொழு தேத்தும் மாந்தர்கள்	
வருந்து மாறறியார் நெறிசேர்வர் வானூடே.	2.52.1
	
நின்று மேய்ந்து நினைந்து மாகரி	
  நீரொ டும்மலர் வேண்டி வான்மழை	
குன்றின் நேர்ந்துகுத்திப் பணிசெய்யுங் கோட்டாற்றுள்	
என்றும் மன்னிய எம்பி ரான்கழல்	
  ஏத்தி வானர சாள வல்லவர்	
பொன்று மாறறியார் புகழார்ந்த புண்ணியரே.	2.52.2
	
விரவி நாளும் விழாவி டைப்பொலி	
  தொண்டர் வந்து வியந்து பண்செயக்	
குரவ மாரும்நீழற் பொழில்மல்கு கோட்டாற்றில்	
அரவ நீள்சடை யானை யுள்கிநின்	
  றாத ரித்துமுன் அன்பு செய்தடி	
பரவுமாறு வல்லார் பழிபற் றறுப்பாரே.	2.52.3
	
அம்பின் நேர்விழி மங்கை மார்பலர்	
  ஆட கம்பெறு மாட மாளிகைக்	
கொம்பி னேர்துகி லின்கொடியாடு கோட்டாற்றில்	
நம்ப னேநட னேந லந்திகழ்	
  நாதனே யென்று காதல் செய்தவர்	
தம்பின் நேர்ந்தறியார் தடுமாற்ற வல்வினையே.	2.52.4
	
பழைய தம்மடி யார்து திசெயப்	
  பாரு ளோர்களும் விண்ணு ளோர்தொழக்	
குழலும் மொந்தை விழாவொலி செய்யுங் கோட்டாற்றில்	
கழலும் வண்சிலம் பும்மொ லிசெயக்	
  கானி டைக்கண மேத்த ஆடிய	
அழக னென்றெழுவா ரணியாவர் வானவர்க்கே.	2.52.5
	
பஞ்சின் மெல்லடி மாத ராடவர்	
  பத்தர் சித்தர்கள் பண்பு வைகலும்	
கொஞ்சி இன்மொழியாற் தொழில்மல்கு கோட்டாற்றில்	
மஞ்ச னேமணி யேம ணிமிடற்	
  றண்ண லேயென வுள்நெ கிழ்ந்தவர்	
துஞ்சு மாறறியார் பிறவார்இத் தொல்நிலத்தே.	2.52.6
	
கலவ மாமயி லாளொர் பங்கனைக்	
  கண்டு கண்மிசை நீர்நெ கிழ்த்திசை	
குலவு மாறுவல்லார் குடிகொண்ட கோட்டாற்றில்	
நிலவு மாமதி சேர்ச டையுடை	
  நின்ம லாவென வுன்னு வாரவர்	
உலவு வானவரின் உயர்வாகுவ துண்மையதே.	2.52.7
	
வண்ட லார்வயற் சாலி யாலைவ	
  ளம்பொ லிந்திட வார்பு னல்திரை	
கொண்ட லார்கொணர்ந் தங்குலவுந்திகழ் கோட்டாற்றில்	
தொண்டெ லாந்துதி செய்ய நின்ற	
  தொழில னேகழ லால ரக்கனை	
மிண்டெ லாந்தவிர்த் தென்னுகந்திட்ட வெற்றிமையே.	2.52.8
	
கருதி வந்தடி யார்தொ ழுதெழக்	
  கண்ண னோடயன் தேட ஆனையின்	
குருதி மெய்கலப்ப உரிகொண்டு கோட்டாற்றில்	
  விருதி னான்மட மாதும் நீயும்வி	
யப்பொ டும்முயர் கோயில் மேவிவெள்	
  எருதுகந் தவனே இரங்காயுன தின்னருளே.	2.52.9
	
உடையி லாதுழல் கின்ற குண்டரும்	
  ஊண ருந்தவத் தாய சாக்கியர்	
கொடையி லாமனத்தார் குறையாருங் கோட்டாற்றில்	
படையி லார்மழு வேந்தி யாடிய	
  பண்ப னேயிவ ரென்கொ லோநுனை	
அடைகி லாதவண்ணம் அருளாயுன் னடியவர்க்கே.	2.52.10
	
கால னைக்கழ லாலுதைத்தொரு	
  காம னைக்கன லாகச் சீறிமெய்	
கோல வார்குழலாள் குடிகொண்ட கோட்டாற்றில்	
மூல னைம்முடி வொன்றி லாதஎம்	
  முத்த னைப்பயில் பந்தன் சொல்லிய	
மாலை பத்தும்வல்லார்க் கெளிதாகும் வானகமே.	2.52.11

	    - திருச்சிற்றம்பலம் -
 • இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - ஐராபதேசுவரர், தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page