திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருஆமாத்தூர் தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 50வது திருப்பதிகம்)

2.50 திருஆமாத்தூர்

பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

குன்ற வார்சிலை நாண்அ ராவரி	
  வாளி கூரெரி காற்றின் மும்மதில்	
வென்றவா றெங்ஙனே விடையேறும் வேதியனே	
தென்ற லார்மணி மாட மாளிகை	
  சூளி கைக்கெதிர் நீண்ட பெண்ணைமேல்	
அன்றில்வந் தணையும் ஆமாத்தூர் அம்மானே.	2.50.1
	
பரவி வானவர் தான வர்பல	
  ருங்க லங்கிட வந்த கார்விடம்	
வெருவஉண் டுகந்த அருளென்கொல் விண்ணவனே	
கரவின் மாமணி பொன்கொ ழித்திழி	
  சந்து காரகில் தந்து *பம்பைநீர்	
அருவிவந் தலைக்கும் ஆமாத்தூர் அம்மானே.	2.50.2
	
நீண்ட வார்சடை தாழ நேரிழை	
  பாட நீறுமெய் பூசி மாலயன்	
மாண்டவார் சுடலை நடமாடும் மாண்பதுவென்	
பூண்ட கேழல் மருப்ப ராவிரி	
  கொன்றை வாளரி யாமை பூணென	
ஆண்டநா யகனே ஆமாத்தூர் அம்மானே.	2.50.3
	
சேலின் நேரன கண்ணி வெண்ணகை	
  மான்வி ழித்தி ருமாதைப் பாகம்வைத்	
தேலமா தவம்நீ முயல்கின்ற வேடமிதென்	
பாலின் நேர்மொழி மங்கை மார்நட	
  மாடி யின்னிசை பாட நீள்பதி	
ஆலைசூழ் கழனி ஆமாத்தூர் அம்மானே.	2.50.4
	
தொண்டர் வந்துவ ணங்கி மாமலர்	
  தூவி நின்கழ லேத்து வாரவர்	
உண்டியால் வருந்த இரங்காத தென்னைகொலாம்	
வண்ட லார்கழ னிக்க லந்தும	
  லர்ந்த தாமரை மாதர் வாண்முகம்	
அண்டவா ணர்தொழும் ஆமாத்தூர் அம்மானே.	2.50.5
	
ஓதி யாரண மாய நுண்பொருள்	
  அன்று நால்வர்முன் கேட்க நன்னெறி	
நீதியால நீழ லுரைக்கின்ற நீர்மையதென்	
சோதி யேசுட ரேசு ரும்பமர்	
  கொன்றை யாய்திரு நின்றி யூருறை	
ஆதியே அரனே ஆமாத்தூர் அம்மானே.	2.50.6
	
மங்கை வாணுதன் மான்ம னத்திடை	
  வாடி யூடம ணங்க மழ்சடைக்	
கங்கையா ளிருந்த கருத்தாவ தென்னைகொலாம்	
பங்க யமது வுண்டு வண்டிசை	
  பாட மாமயி லாட விண்முழ	
வங்கையா லதிர்க்கும் ஆமாத்தூர் அம்மானே.	2.50.7
	
நின்ற டர்த்திடும் ஐம்பு லன் நிலை	
  யாத வண்ணம்நி னைந்து ளத்திடை	
வென்றடர்த் தொருபால் மடமாதை விரும்புதலென்	
குன்றெ டுத்தநி சாசரன் திரள்	
  தோளி ருபது தான் நெரிதர	
அன்றடர்த் துகந்தாய் ஆமாத்தூர் அம்மானே.	2.50.8
	
செய்ய தாமரை மேலி ருந்தவ	
  னோடு மாலடி தேட நீண்முடி	
வெய்யஆ ரழலாய் நிமிர்கின்ற வெற்றிமையென்	
தைய லாளொடு பிச்சைக் கிச்சை	
  தயங்கு தோலரை யார்த்த வேடங்கொண்	
டைய மேற்றுகந்தாய் ஆமாத்தூர் அம்மானே.	2.50.9
	
புத்தர் புன்சமண் ஆதர் பொய்ம்மொழி	
  நூல்பிடித்தலர் தூற்ற நின்னடி	
பத்தர் பேணநின்ற பரமாய பான்மையதென்	
முத்தை வென்ற முறுவ லாளுமை	
  பங்க னென்றிமை யோர்ப ரவிடும்	
அத்தனே அரியாய் ஆமாத்தூர் அம்மானே.	2.50.10
	
வாடல் வெண்டலை மாலை யார்த்தும	
  யங்கி ருள்ளெரி யேந்தி மாநடம்	
ஆடல்மே யதென்னென் றாமாத்தூர் அம்மானைக்	
கோடல் நாகம் அரும்பு பைம்பொழிற்	
  கொச்சை யாரிறை ஞான சம்பந்தன்	
பாடல்பத் தும்வல்லார் பரலோகஞ் சேர்வாரே.	2.50.11

	    - திருச்சிற்றம்பலம் -
 • ஆமாத்தூர் என்பது பசுக்களுக்குத் தாயகமானவூர் என்றும், ஆமாதாவூர் எனற்பாலது ஆமாத்தூர் என மருவி நின்ற தென்றும் பெரியோர்களாற் சொல்லக் கேள்வி. ஆ - பசு.


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page