திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
சீகாழி தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 49வது திருப்பதிகம்)

2.49 சீகாழி

பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

பண்ணின் நேர்மொழி மங்கை மார்பலர்	
  பாடி யாடிய வோசை நாடொறுங்	
கண்ணின் நேரயலே பொலியும் கடற்காழிப்	
பெண்ணின் நேரொரு பங்கு டைப்பெரு 	
  மானையெம்பெரு மான்என் றென்றுன்னும்	
அண்ண லாரடியார் அருளாலுங் குறைவிலரே.	2.49.1
	
மொண்ட லம்பிய வார்தி ரைக்கடல்	
  மோதி மீதெறி சங்கம் வங்கமுங்	
கண்டலம் புடைசூழ் வயல்சேர் கலிக்காழி	
வண்ட லம்பிய கொன்றை யானடி	
  வாழ்த்தி யேத்திய மாந்தர் தம்வினை	
விண்டல் அங்கெளிதாம் அதுநல் விதியாமே.	2.49.2
	
நாடெ லாமொளி யெய்த நல்லவர்	
  நன்று மேத்தி வணங்கு வார்பொழிற்	
காடெ லாமலர் தேன்துளிக்குங் கடற்காழித்	
தோடு லாவிய காது ளாய்சுரி	
  சங்க வெண்குழை யாயென் றென்றுன்னும்	
வேடங் கொண்டவர்கள் வினைநீங்க லுற்றாரே.	2.49.3
	
மையி னார்பொழில் சூழ நீழலில்	
  வாச மார்மது மல்க நாடொறுங்	
கையி னார்மலர் கொண்டெழுவார் கலிக்காழி	
ஐய னேயர னேயென் றாதரித்	
  தோதி நீதியு ளேநி னைப்பவர்	
உய்யு மாறுலகில் உயர்ந்தாரி னுள்ளாரே.	2.49.4
	
மலிக டுந்திரை மேல்நி மிர்ந்தெதிர்
  வந்து வந்தொளிர் நித்தி லம்விழக்	
கலிக டிந்தகையார் மருவுங் கலிக்காழி	
வலிய காலனை வீட்டி மாணிதன்	
  இன்னு யிரளித் தானை வாழ்த்திட	
மெலியுந் தீவினைநோ ய்வைமே வுவர்வீடே.	2.49.5
	
மற்றும் இவ்வுல கத்து ளோர்களும்	
  வானு ளோர்களும் வந்து வைகலுங்	
கற்ற சிந்தையராய்க் கருதுங் கலிக்காழி	
நெற்றி மேலமர் கண்ணி னானை	
  நினைந்தி ருந்திசை பாடுவார் வினை	
செற்ற மாந்தரெனத் தெளிமின்கள் சிந்தையுளே.	2.49.6
	
தான லம்புரை வேதி யரொடு	
  தக்க மாதவர் தாந்தொ ழப்பயில்	
கானலின் விரைசேர விம்முங் கலிக்காழி	
ஊனு ளாருயிர் வாழ்க்கை யாயுற	
  வாகி நின்றவொ ருவனே யென்றென்	
றானலங் கொடுப்பார் அருள்வேந்த ராவாரே.	2.49.7
	
மைத்த வண்டெழு சோலை யாலைகள்	
  சாலி சேர்வய லார வைகலுங்	
கத்து வார்கடல் சென்றுலவுங் கலிக்காழி	
அத்த னேயர னேய ரக்கனை 	
  யன்ற டர்த்துகந் தாயு னகழல்	
பத்தராய்ப் பரவும் பயன் ஈங்கு நல்காயே.	2.49.8
	
பரும ராமொடு தெங்கு பைங்கத	
  லிப்ப ருங்கனி யுண்ண மந்திகள்	
கருவரா லுகளும் வயல்சூழ் கலிக்காழித்	
திருவின் நாயக னாய மாலொடு	
  செய்ய மாமலர்ச் செல்வ னாகிய	
இருவர் காண்பரியா னென ஏத்துத லின்பமே.	2.49.9
	
பிண்ட முண்டுழல் வார்க ளும்பிரி	
  யாது வண்துகி லாடை போர்த்தவர்	
கண்டு சேரகிலார ழகார் கலிக்காழித்	
தொண்டை வாயுமை யோடு கூடிய	
  வேட னேசுட லைப்பொ டியணி	
அண்டவாண னென்பார்க் கடையா அல்லல்தானே.	2.49.10
	
பெயரெ னும்மிவை பன்னி ரண்டினும்	
  உண்டெ னப்பெயர் பெற்ற வூர்திகழ்	
கயலுலாம் வயல்சூழ்ந் தழகார் கலிக்காழி	
நயன டன்கழ லேத்தி வாழ்த்திய	
  ஞான சம்பந்தன் செந்த மிழுரை	
உயருமா மொழிவா ருலகத் துயர்ந்தாரே.	2.49.11

	    - திருச்சிற்றம்பலம் -


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page