திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருக்கைச்சினம் தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 45வது திருப்பதிகம்)

2.45 திருக்கைச்சினம்

பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

தையலோர் கூறுடையான் தண்மதிசேர் செஞ்சடையான்	
மையுலா மணிமிடற்றன் மறைவிளங்கு பாடலான்	
நெய்யுலா மூவிலைவே லேந்தி நிவந்தொளிசேர்	
கையுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே.	2.45.1
	
விடமல்கு கண்டத்தான் வெள்வளையோர் கூறுடையான்	
படமல்கு பாம்பரையான் பற்றாதார் புரமெரித்தான்	
நடமல்கும் ஆடலினான் நான்மறையோர் பாடலினான்	
கடமல்கு மாவுரியான் உறைகோயில் கைச்சினமே.	2.45.2
	
பாடலார் நான்மறையான் பைங்கொன்றை பாம்பினொடும்	
சூடலான் வெண்மதியந் துன்று கரந்தையொடும்	
ஆடலான் அங்கை அனலேந்தி ஆடரவக்	
காடலான் மேவியுறை கோயில் கைச்சினமே.	2.45.3
	
பண்டமரர் கூடிக் கடைந்த படுகடல்நஞ்	
சுண்டபிரான் என்றிறைஞ்சி உம்பர் தொழுதேத்த	
விண்டவர்கள் தொல்நகரம் மூன்றுடனே வெந்தவியக்	
கண்ட பிரான் மேவியுறை கோயில் கைச்சினமே.	2.45.4
	
தேய்ந்துமலி வெண்பிறையான் செய்யதிரு மேனியினன்	
வாய்ந்திலங்கு வெண்ணீற்றான் மாதினையோர் கூறுடையான்	
சாய்ந்தமரர் வேண்டத் தடங்கடல்நஞ் சுண்டநங்கைக்	
காய்ந்தபிரான் மேவியுறை கோயில் கைச்சினமே.	2.45.5
	
மங்கையோர் கூறுடையான் மன்னு மறைபயின்றான்	
அங்கையோர் வெண்டலையான் ஆடரவம் பூண்டுகந்தான்	
திங்களொடு பாம்பணிந்த சீரார் திருமுடிமேல்	
கங்கையினான் மேவியுறை கோயில் கைச்சினமே.	2.45.6
	
வரியரவே நாணாக மால்வரையே வில்லாக	
எரிகணையால் முப்புரங்கள் எய்துகந்த எம்பெருமான்	
பொரிசுடலை யீமப் புறங்காட்டான் போர்த்ததோர்	
கரியுரியான் மேவியுறை கோயில் கைச்சினமே.	2.45.7
	
போதுலவு கொன்றை புனைந்தான் திருமுடிமேல்	
மாதுமையா ளஞ்ச மலையெடுத்த வாளரக்கன்	
நீதியினா லேத்த நிகழ்வித்து நின்றாடும்	
காதலினான் மேவியுறை கோயில் கைச்சினமே.	2.45.8
	
*****
	
மண்ணினைமுன் சென்றிரந்த மாலும் மலரயனும்	
எண்ணறியா வண்ணம் எரியுருவ மாயபிரான்	
பண்ணிசையா லேத்தப் படுவான்றன் நெற்றியின்மேல்	
கண்ணுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே.	2.45.10

தண்வயல்சூழ் காழித் தமிழ்ஞான சம்பந்தன்	
கண்ணுதலான் மேவியுறை கோயில் கைச்சினத்தைப்	
பண்ணிசையா லேத்திப் பயின்ற இவைவல்லார்	
விண்ணவரா யோங்கி வியனுலகம் ஆள்வாரே.	2.45.11

* இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

	        - திருச்சிற்றம்பலம் -

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - கைச்சினநாதர்; தேவியார் - வேள்வளையம்மை.


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page