திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருஆமாத்தூர் தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 44வது திருப்பதிகம்)

2.44 திருஆமாத்தூர்

பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

துன்னம்பெய் கோவணமுந் தோலு முடையாடை	
பின்னஞ் சடைமேலோர் பிள்ளை மதிசூடி	
அன்னஞ்சேர் தண்கானல் ஆமாத்தூர் அம்மான்றன்	
பொன்னங் கழல்பரவாப் பொக்கமும் பொக்கமே.	2.44.1
	
கைம்மாவின் தோல்போர்த்த காபாலி வானுலகில்	
மும்மா மதிலெய்தான் முக்கணான் பேர்பாடி	
அம்மா மலர்ச்சோலை ஆமாத்தூர் அம்மான்எம்	
பெம்மானென் றேத்தாதார் பேயரிற் பேயரே.	2.44.2
	
பாம்பரைச் சாத்தியோர் பண்டரங்கன் விண்டதோர்	
தேம்பல் இளமதியஞ் சூடிய சென்னியான்	
ஆம்பலம் பூம்பொய்கை ஆமாத்தூர் அம்மான்றன்	
சாம்பல் அகலத்தார் சார்பல்லாற் சார்பிலமே.	2.44.3
	
கோணாகப் பேரல்குற் கோல்வளைக்கை மாதராள்	
பூணாகம் பாகமாப் புல்கி யவளோடும்	
ஆணாகங் காதல்செய் ஆமாத்தூர் அம்மானைக்	
காணாத கண்ணெல்லாங் காணாத கண்களே.	2.44.4
	
பாடல் நெறிநின்றான் பைங்கொன்றைத் தண்டாரே	
சூடல் நெறிநின்றான் சூலஞ்சேர் கையினான்	
ஆடல் நெறிநின்றான் ஆமாத்தூர் அம்மான்றன்	
வேட நெறிநில்லா வேடமும் வேடமே.	2.44.5
	
சாமவரை வில்லாகச் சந்தித்த வெங்கணையால்	
காவல் மதிலெய்தான் கண்ணுடை நெற்றியான்	
யாவருஞ் சென்றேத்தும் ஆமாத்தூர் அம்மானத்	
தேவர் தலைவணங்குந் தேவர்க்குந் தேவனே.	2.44.6
	
மாறாத வெங்கூற்றை மாற்றி மலைமகளை	
வேறாக நில்லாத வேடமே காட்டினான்	
ஆறாத தீயாடி ஆமாத்தூர் அம்மானைக்	
கூறாத நாவெல்லாங் கூறாத நாக்களே.	2.44.7
	
தாளால் அரக்கன்தோள் சாய்த்த தலைமகன்றன்	
நாள்ஆ திரையென்றே நம்பன்றன் நாமத்தால்	
ஆளானார் சென்றேத்தும் ஆமாத்தூர் அம்மானைக்	
கேளாச் செவியெல்லாங் கேளாச் செவிகளே.	2.44.8
	
புள்ளுங் கமலமுங் கைக்கொண்டார் தாமிருவர்	
உள்ளும் அவன்பெருமை ஒப்பளக்குந் தன்மையதே	
அள்ளல் விளைகழனி ஆமாத்தூர் அம்மான்எம்	
வள்ளல் கழல்பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே.	2.44.9
	
பிச்சை பிறர்பெய்யப் பின்சாரக் கோசாரக்	
கொச்சை புலால்நாற ஈருரிவை போர்த்துகந்தான்	
அச்சந்தன் மாதேவிக் கீந்தான்றன் ஆமாத்தூர்	
நிச்சல் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே.	2.44.10
	
ஆட லரவசைத்த ஆமாத்தூர் அம்மானைக்	
கோட லிரும்புறவிற் கொச்சை வயத்தலைவன்	
நாட லரியசீர் ஞானசம் பந்தன்றன்	
பாட லிவைவல்லார்க் கில்லையாம் பாவமே.	2.44.11

	        - திருச்சிற்றம்பலம் -

இத்தலம் நடுநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - அழகியநாதேசுவரர்; தேவியார் - அழகியநாயகியம்மை.


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page