திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(இரண்டாம் திருமுறை)

2.43 திருப்புள்ளிருக்குவேளூர்


பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

459

கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம்
உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானார் உறையுமிடந்
தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்
புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே.

01
460

தையலாள் ஒருபாகஞ் சடைமேலாள் அவளோடும்
ஐயந்தேர்ந் துழல்வாரோர் அந்தணனார் உறையுமிடம்
மெய்சொல்லா இராவணனை மேலோடி யீடழித்துப்
பொய்சொல்லா துயிர்போனான் புள்ளிருக்கு வேளூரே.

02
461

வாசநலஞ் செய்திமையோர் நாடோ றும் மலர்தூவ
ஈசனெம் பெருமானார் இனிதாக உறையுமிடம்
யோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங் கொருநாளும் ஒழியாமே
பூசனைசெய் தினிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே.

03
462

மாகாயம் பெரியதொரு மானுரிதோ லுடையாடை
ஏகாய மிட்டுகந்த எரியாடி உறையுமிடம்
ஆகாயந் தேரோடும் இராவணனை அமரின்கண்
போகாமே பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.

04
463

கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப்
பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம்
வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே.

05
464

திறங்கொண்ட அடியார்மேல் தீவினைநோய் வாராமே
அறங்கொண்டு சிவதன்மம் உரைத்தபிரான் அமருமிடம்
மறங்கொண்டங் கிராவணன்றன் வலிகருதி வந்தானைப்
புறங்கண்ட சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.

06
465

அத்தியின்ஈ ருரிமூடி அழகாக அனலேந்திப்
பித்தரைப்போற் பலிதிரியும் பெருமானார் பேணுமிடம்
பத்தியினால் வழிபட்டுப் பலகாலந் தவஞ்செய்து
புத்தியொன்ற வைத்துகந்தான் புள்ளிருக்கு வேளூரே.

07
466

பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக
மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம்
எண்ணின்றி முக்கோடி வாணாள துடையானைப்
புண்ணொன்றப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.

08
467

வேதித்தார் புரமூன்றும் வெங்கணையால் வெந்தவியச்
சாதித்த வில்லாளி கண்ணாளன் சாருமிடம்
ஆதித்தன் மகனென்ன அகன்ஞாலத் தவரோடும்
போதித்த சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.

09
468

கடுத்துவருங் கங்கைதனைக் கமழ்சடையொன் றாடாமே
தடுத்தவரெம் பெருமானார் தாமினிதா யுறையுமிடம்
விடைத்துவரும் இலங்கைக்கோன் மலங்கச்சென் றிராமற்காப்
புடைத்தவனைப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.

10
469

செடியாய வுடல்தீர்ப்பான் தீவினைக்கோர் மருந்தாவான்
பொடியாடிக் கடிமைசெய்த புள்ளிருக்கு வேளூரைக்
கடியார்ந்த பொழில்காழிக் கவுணியன்சம் பந்தன்சொல்
மடியாது சொல்லவல்லார்க் கில்லையாம் மறுபிறப்பே.

11

திருச்சிற்றம்பலம்
Back to Complete Second thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page