திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(இரண்டாம் திருமுறை)

2.42 திருஆக்கூர்


பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

448

அக்கிருந்த ஆரமும் ஆடரவும் ஆமையுந்
தொக்கிருந்த மார்பினான் தோலுடையான் வெண்ணீற்றான்
புக்கிருந்த தொல்கோயில் பொய்யிலா மெய்ந்நெறிக்கே
தக்கிருந்தார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.

01
449

நீரார வார்சடையான் நீறுடையான் ஏறுடையான்
காரார்பூங் கொன்றையினான் காதலித்த தொல்கோயில்
கூராரல் வாய்நிறையக் கொண்டயலே கோட்டகத்திற்
தாராமல் காக்கூரில் தான்தோன்றி மாடமே.

02
450

வாளார்கண் செந்துவர்வாய் மாமலையான் றன்மடந்தைத்
தோளாகம் பாகமாப் புல்கினான் தொல்கோயில்
வேளாள ரென்றவர்கள் வள்ளன்மையான் மிக்கிருக்குந்
தாளாளர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.

03
451

கொங்குசேர் தண்கொன்றை மாலையினான் கூற்றடரப்
பொங்கினான் பொங்கொளிசேர் வெண்ணீற்றான் பூங்கோயில்
அங்கம் ஆறோடும் அருமறைகள் ஐவேள்வி
தங்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.

04
452

வீக்கினான் ஆடரவம் வீழ்ந்தழிந்தார் வெண்டலையென்
பாக்கினான் பலகலன்க ளாதரித்துப் பாகம்பெண்
ஆக்கினான் தொல்கோயில் ஆம்பலம்பூம் பொய்கைபுடைத்
தாக்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.

05
453

பண்ணொளிசேர் நான்மறையான் பாடலினோ டாடலினான்
கண்ணொளிசேர் நெற்றியினான் காதலித்த தொல்கோயில்
விண்ணொளிசேர் மாமதியந் தீண்டியக்கால் வெண்மாடந்
தண்ணொளிசேர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.

06
454

வீங்கினார் மும்மதிலும் வில்வரையால் வெந்தவிய
வாங்கினார் வானவர்கள் வந்திறைஞ்சுந் தொல்கோயில்
பாங்கினார் நான்மறையோ டாறங்கம் பலகலைகள்
தாங்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.

07
455

கன்னெடிய குன்றெடுத்தான் தோளடரக் காலூன்றி
இன்னருளால் ஆட்கொண்ட எம்பெருமான் தொல்கோயில்
பொன்னடிக்கே நாடோ றும் பூவோடு நீர்சுமக்குந்
தன்னடியார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.

08
456

நன்மையான் நாரணனும் நான்முகனுங் காண்பரிய
தொன்மையான் தோற்றங்கே டில்லாதான் தொல்கோயில்
இன்மையாற் சென்றிரந்தார்க் கில்லையென்னா தீந்துவக்குந்
தன்மையார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.

09
457

நாமருவு புன்மை நவிற்றச் சமண்தேரர்
பூமருவு கொன்றையினான் புக்கமருந் தொல்கோயில்
சேன்மருவு பங்கயத்துச் செங்கழுநீர் பைங்குவளை
தாமருவும் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.

10
458

ஆடல் அமர்ந்தானை ஆக்கூரில் தான்தோன்றி
மாடம் அமர்ந்தானை மாடஞ்சேர் தண்காழி
நாடற் கரியசீர் ஞானசம் பந்தன்சொல்
பாடலிவை வல்லார்க் கில்லையாம் பாவமே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுயம்புநாதேசுவரர், தேவியார் - கட்கநேத்திரவம்மை.

திருச்சிற்றம்பலம்
Back to Complete Second thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page