திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 41வது திருப்பதிகம்)

2.41 திருச்சாய்க்காடு

பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

மண்புகார் வான்புகுவர் மனமிளையார் பசியாலுங்   	
கண்புகார் பிணியறியார் கற்றாருங் கேட்டாரும்   	
விண்புகா ரெனவேண்டா வெண்மாட நெடுவீதித்  	
தண்புகார்ச் சாய்க்காட்டெந் தலைவன்தாள் சார்ந்தாரே.	2.41.1
	
போய்க்காடே மறைந்துறைதல் புரிந்தானும் பூம்புகார்ச்    	
சாய்க்காடே பதியாக உடையானும் விடையானும் 	
வாய்க்காடு முதுமரமே இடமாக வந்தடைந்த   	
பேய்க்காடல் புரிந்தானும் பெரியோர்கள் பெருமானே. 	2.41.2
	
நீநாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் யாரறிவார்    	
சாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே  	
பூநாளுந் தலைசுமப்பப் புகழ்நாமஞ் செவிகேட்ப    	
நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே.	2.41.3
	
கட்டலர்த்த மலர்தூவிக் கைதொழுமின் பொன்னியன்ற   	
தட்டலர்த்த பூஞ்செருத்தி கோங்கமருந் தாழ்பொழில்வாய்    	
மொட்டலர்த்த தடந்தாழை முருகுயிர்க்குங் காவிரிப்பூம்   	
பட்டினத்துச் சாய்க்காட்டெம் பரமேட்டி பாதமே.	2.41.4
	
கோங்கன்ன குவிமுலையாள் கொழும்பணைத்தோட் கொடியிடையைப்   	
பாங்கென்ன வைத்துகந்தான் படர்சடைமேற் பால்மதியந் 	
தாங்கினான் பூம்புகார்ச் சாய்க்காட்டான் தாள்நிழற்கீழ்  	
ஓங்கினார் ஓங்கினா ரெனவுரைக்கும் உலகமே.	2.41.5
	
சாந்தாக நீறணிந்தான் சாய்க்காட்டான் காமனைமுன்  	
தீந்தாகம் எரிகொளுவச் செற்றுகந்தான் திருமுடிமேல் 	
ஓய்ந்தார மதிசூடி யொளிதிகழும் மலைமகள்தோள்    	
தோய்ந்தாகம் பாகமா வுடையானும் விடையானே.	2.41.6
	
மல்குல்தோய் மணிமாடம் மதிதவழும் நெடுவீதி 	
சங்கெலாங் கரைபொருது திரைபுலம்புஞ் சாய்க்காட்டான்    	
கொங்குலா வரிவண்டின் இசைபாடு மலர்க்கொன்றைத்   	
தொங்கலான் அடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருளலவே.	2.41.7
	
தொடலரிய தொருகணையாற் புரமூன்றும் எரியுண்ணப்   	
படஅரவத் தெழிலாரம் பூண்டான்பண் டரக்கனையுந்    	
தடவரையால் தடவரைத்தோ ளுன்றினான் சாய்க்காட்டை   	
இடவகையால் அடைவோமென் றெண்ணுவார்க் கிடரிலையே.   	2.41.8
	
வையநீ ரேற்றானும் மலருறையும் நான்முகனும் 	
ஐயன்மார் இருவர்க்கும் அளப்பரிதால் அவன்பெருமை  	
தையலார் பாட்டோவாச் சாய்க்காட்டெம் பெருமானைத்  	
தெய்வமாப் பேணாதார் தெளிவுடைமை தேறோமே.	2.41.9
	
குறங்காட்டு நால்விரலிற் கோவணத்துக் கோலோவிப்போய்  	
அறங்காட்டுஞ் சமணருஞ் சாக்கியரும் அலர்தூற்றுந்  	
திறங்காட்டல் கேளாதே தெளிவுடையீர் சென்றடைமின்  	
புறங்காட்டில் ஆடலான் பூம்புகார்ச் சாய்க்காடே.	2.41.10
	
நொம்பைந்து புடைத்தொல்கு நூபுரஞ்சேர் மெல்லடியார் 	
அம்பந்தும் வரிக்கழலும் அரவஞ்செய் பூங்காழிச்   	
சம்பந்தன் தமிழ்பகர்ந்த சாய்க்காட்டுப் பத்தினையும்    	
எம்பந்த மெனக்கருதி ஏத்துவார்க் கிடர்கெடுமே.		2.41.11

	    - திருச்சிற்றம்பலம் -


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page