திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
பொது தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 39வது திருப்பதிகம்)

2.39 பொது - திருக்ஷேத்திரக்கோவை

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

ஆரூர்தில்லை யம்பலம் வல்லந்நல்லம்	
  வடகச்சியு மச்சிறு பாக்கம் நல்ல	
கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி	
  கடல்சூழ் கழிப்பாலை தென்கோடி பீடார்	
நீரூர் வயல்நின்றியூர் குன்றியூருங்	
  குருகா வையூர் நாரையூர் நீடுகானப்	
பேரூர்நன் னீள்வயல் நெய்த்தானமும்	
  பிதற்றாய்பிறை சூடிதன் பேரிடமே. 	2.39.1
	
அண்ணாமலை யீங்கோயும் அத்தி முத்தா	
  றகலா முதுகுன்றங் கொடுங்குன்றமுங்	
கண்ணார் கழுக்குன்றங் கயிலை கோணம்	
  பயில்கற் குடிகாளத்தி வாட்போக்கியும்	
பண்ணார்மொழி மங்கையோர் பங்குடையான்	
  பரங்குன்றம் பருப்பதம் பேணிநின்றே	
எண்ணாய் இரவும் பகலும் இடும்பைக்	
  கடல் நீந் தலாங்கா ரணமே. 	2.39.2
	
அட்டானமென் றோதிய நாலிரண்டும்	
  அழகன்னுறை காவனைத் துந்துறைகள்	
எட்டாந் திருமூர்த்தியின் காடொன்பதுங்	
  குளமூன்றுங் களமஞ்சும் பாடிநான்கும்	
மட்டார்குழ லாள்மலை மங்கை பங்கன்	
  மதிக்கும் மிடமாகிய பாழி மூன்றும்	
சிட்டா னவன் பாசூரென் றேவிரும்பாய்	
  அரும்பா வங்களா யினதேய்ந் தறவே. 	2.39.3
	
அறப்பள்ளி அகத்தியான் பள்ளி வெள்ளைப்	
  பொடிபூசி யாறணி வானமர் காட்டுப்பள்ளி	
சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன்பள்ளி	
  திருநனி பள்ளிசீர் மகேந் திரத்துப்	
பிறப்பில் லவன்பள்ளி வெள்ளச் சடையான்	
  விரும்பும் மிடைப்பள்ளி வண்சக்கரம்மால்	
உறைப்பாலடி போற்றக் கொடுத்த பள்ளி	
  உணராய்மடநெஞ்ச மேயுன்னி நின்றே.	2.39.4
	
ஆறைவட மாகறல் அம்பர்ஐயா	
  றணியார் பெருவேளூர் விளமர் தெங்கூர்	
சேறைதுலை புகலூரக லாதிவை காதலித்தா	
  னவன் சேர்பதியே **********************************	
****************************************************************	
  *************************************************************	
****************************************************************	
இச்செய்யுளின் சிலஅடிகளும் சீர்களும் சிதைந்துபோயின.	2.39.5
	
மனவஞ்சர்மற் றோடமுன் மாதராரும்	
  மதிகூர்திருக் கூடலில் ஆலவாயும்	
இனவஞ் சொலிலா இடைமா மருதும்	
  இரும்பைப்பதி மாகாளம் வெற்றியூருங்	
கனமஞ்சின மால்விடை யான்விரும்புங்	
  கருகாவூர் நல்லூர் பெரும்புலியூர்	
தனமென் சொலிற்றஞ்ச மென்றே நினைமின்	
  தவமாம்மல மாயின தானறுமே. 	2.39.6
	
மாட்டூர்மட ப்பாச்சி லாச்சிராமம்	
  முண்டீச்சரம் வாதவூர் வாரணாசி	
காட்டூர்கடம் பூர்படம் பக்கங் கொட்டுங்	
  கடலொற்றியூர்மற் றுறையூ ரவையும்	
கோட்டூர் திருவாமாத் தூர்கோ ழம்பமுங்	
  கொடுங்கோவலூர் திருக்குண வாயில்***** 	
***********************************************************	
இச்செய்யுளின் சிலஅடிகளும் சீர்களும் சிதைந்துபோயின.	2.39.7
	
********* குலாவுதிங்கட் சடையான்	
  குளிரும் பரிதி நியமம்	
போற்றூ ரடியார் வழிபா டொழியாத் தென்	
  புறம்பயம் பூவணம் பூழியூரும்	
காற்றூர் வரையன் றெடுத்தான் முடிதோள்	
  நெரித்தானுறை கோயில்********************** 	
*************************** லென் றென்று நீகருதே.	
இச்செய்யுளின் சிலஅடிகளும் சீர்களும் சிதைந்துபோயின.	2.39.8
	
நெற்குன்றம் ஓத்தூர் நிறைநீர் மருகல்	
  நெடுவாயில் குறும்பலா நீடுதிரு	
நற்குன்றம் வலம்புரம் நாகேச்சுரம்	
  நளிர்சோலை உஞ்சேனை மாகாளம் வாய்மூர்	
கற்குன்ற மொன்றேந்தி மழைதடுத்த	
  கடல்வண் ணனுமாமல ரோனுங்காணாச்	
சொற்கென் றுந்தொலைவிலாதா னுறையுங்	
  குடமூக்கென்றுசொல் லிக்குலா வுமினே. 	2.39.9
	
குத்தங்குடி வேதி குடிபுனல்சூழ்	
  குருந்தங்குடி தேவன் குடிமருவும்	
அத்தங்குடி தண்டிருவண் குடியும்	
  அலம்புஞ்சலந்தன் சடைவைத் துகந்த	
நித்தன் நிமலன் உமையோடுங்கூட	
  நெடுங்காலம் உறைவிட மென்று சொல்லாப்	
புத்தர் புறங்கூ றியபுன் சமணர்	
  நெடும்பொய்களைவிட் டுநினைந் துய்ம்மினே.	2.39.10
	
அம்மானை யருந்தவ மாகிநின்ற	
  அமரர் பெருமான் பதியான வுன்னிக்	
கொய்ம்மா மலர்ச்சோலை குலாவு கொச்சைக்	
  கிறைவன் சிவஞான சம்பந்தன் சொன்ன	
இம்மா லையீரைந் தும்இரு நிலத்தில்	
  இரவும் பகலுந்நினைந் தேத்திநின்று	
விம்மா வெருவா விரும்பும் மடியார்	
  விதியார் பிரியார் சிவன்சே வடிக்கே. 	2.39.11
	
	
       இப்பதிகத்தில் 5,7,8 ஆம் செய்யுளில்	
          சில பகுதிகள் சிதைந்துபோயின	
	
	
இப்பதிகத்தில் வரும் குன்றியூர், இடைப்பள்ளி, மாட்டூர், வாதவூர், 
வாரணாசி, கோட்டூர், குணவாயில், நெற்குன்றம், நற்குன்றம், 
நெடுவாயில், உஞ்சேனைமாகாளம், குத்தங்குடி, குருந்தேவன்குடி, 
மத்தங்குடி, திருவண்குடி இவைகட்குத் தனித்தனித்	
தேவார மில்லாமையால் வைப்புத்தலமென்று சொல்லப்படும்.

	    - திருச்சிற்றம்பலம் -


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page