திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 35வது திருப்பதிகம்)

2.35 திருத்தென்குரங்காடுதுறை

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

பரவக் கெடும்வல் வினைபா ரிடஞ்சூழ	
இரவிற் புறங்காட் டிடைநின் றெரியாடி	
அரவச் சடையந் தணன்மேய அழகார்	
குரவப் பொழில்சூழ் குரங்கா டுதுறையே.	2.35.1
	
விண்டார் புரமூன்று மெரித்த விமலன்	
இண்டார் புறங்காட் டிடைநின் றெரியாடி	
வண்டார் கருமென் குழல்மங் கையொர்பாகம்	
கொண்டான் நகர்போல் குரங்கா டுதுறையே.	2.35.2
	
நிறைவில் புறங்காட் டிடைநே ரிழையோடும்	
இறைவில் லெரியான் மழுவேந் திநின்றாடி	
மறையின் னொலிவா னவர்தா னவரேத்தும்	
குறைவில் லவனூர் குரங்கா டுதுறையே.	2.35.3
	
விழிக்குந் நுதன்மே லொருவெண் பிறைசூடித்	
தெழிக்கும் புறங்காட் டிடைசேர்ந் தெரியாடிப்	
பழிக்கும் பரிசே பலிதேர்ந் தவனூர்பொன்	
கொழிக்கும் புனல்சூழ் குரங்கா டுதுறையே.	2.35.4
	
நீறார் தருமே னியன்நெற் றியொர்கண்ணன்	
ஏறார் கொடியெம் மிறையீண் டெரியாடி	
ஆறார் சடையந் தணன்ஆ யிழையாளோர்	
கூறான் நகர்போல் குரங்கா டுதுறையே.	2.35.5
	
நளிரும் மலர்க்கொன் றையுநா றுகரந்தைத்	
துளிருஞ் சுலவிச் சுடுகாட் டெரியாடி	
மிளிரும் மரவார்த் தவன்மே வியகோயில்	
குளிரும் புனல்சூழ் குரங்கா டுதுறையே.	2.35.6
	
பழகும் வினைதீர்ப் பவன்பார்ப் பதியோடும்	
முழவம் குழல்மொந்தை முழங் கெரியாடும்	
அழகன் னயில்மூ விலைவேல் வலனேந்துங்	
குழகன் நகர்போல் குரங்கா டுதுறையே.	2.35.7
	
வரையார்த் தெடுத்தவ் வரக்கன் வலியொல்க	
நிரையார் விரலால் நெரித்திட் டவனூராம்	
கரையார்ந் திழிகா விரிக்கோ லக்கரைமேல்	
குரையார் பொழில்சூழ் குரங்கா டுதுறையே.	2.35.8
	
நெடியா னொடுநான் முகனுந் நினைவொண்ணாப்	
படியா கியபண் டங்கனின் றெரியாடி	
செடியார் தலையேந் தியசெங்கண் வெள்ளேற்றின்	
கொடியான் நகர்போல் குரங்கா டுதுறையே.	2.35.9
	
துவரா டையர்வே டமலாச் சமண்கையர்	
கவர்வாய் மொழிகா தல்செய்யா தவனூராம்	
நவையார் மணிபொன் அகில்சந் தனமுந்திக்	
குவையார் கரைசேர் குரங்கா டுதுறையே.	2.35.10
	
நல்லார் பயில்கா ழியுள்ஞா னசம்பந்தன்	
கொல்லே றுடையான் குரங்கா டுதுறைமேல்	
சொல்லார் தமிழ்மாலை பத்துந் தொழுதேத்த	
வல்லா ரவர்வா னவரோ டுறைவாரே.		2.35.11

	        - திருச்சிற்றம்பலம் -


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page