|
339 |
திருத்திகழ் மலைச்சிறுமி யோடுமிகு தேசர்
உருத்திகழ் எழிற்கயிலை வெற்பிலுறை தற்கே
விருப்புடைய அற்புத ரிருக்குமிட மேரார்
மருத்திகழ் பொழிற்குலவு வண்டிருவை யாறே. | 01 |
340 | கந்தமர வுந்துபுகை யுந்தலில் விளக்கேர்
இந்திர னுணர்ந்துபணி யெந்தையிட மெங்குஞ்
சந்தமலி யுந்தரு மிடைந்தபொழில் சார
வந்தவளி நந்தணவு வண்டிருவை யாறே. | 02
|
341 | கட்டுவட மெட்டுமுறு வட்டமுழ வத்தில்
கொட்டுகர மிட்டவொலி தட்டும்வகை நந்திக்
கிட்டமிக நட்டமவை யிட்டவ ரிடஞ்சீர்
வட்டமதி லுட்டிகழும் வண்டிருவை யாறே. | 03
|
342 | நண்ணியொர் வடத்தினிழல் நால்வர்முனி வர்க்கன்
றெண்ணிலி மறைப்பொருள் விரித்தவ ரிடஞ்சீர்த்
தண்ணின்மலி சந்தகிலொ டுந்திவரு பொன்னி
மண்ணின்மிசை வந்தணவு வண்டிருவை யாறே. | 04
|
343 | வென்றிமிகு தாருகன தாருயிர் மடங்கக்
கன்றிவரு கோபமிகு காளிகத மோவ
நின்றுநட மாடியிட நீடுமலர் மேலால்
மன்றல்மலி யும்பொழில்கொள் வண்டிருவை யாறே. | 05
|
344 | பூதமொடு பேய்கள்பல பாடநட மாடிப்
பாதமுதல் பையரவு கொண்டணி பெறுத்திக்
கோதைய ரிடும்பலி கொளும்பர னிடம்பூ
மாதவி மணங்கமழும் வண்டிருவை யாறே. | 06
|
345 | துன்னுகுழல் மங்கையுமை நங்கைசுளி வெய்தப்
பின்னொரு தவஞ்செய்துழல் பிஞ்ஞகனு மங்கே
என்னசதி என்றுரைசெ யங்கண னிடஞ்சீர்
மன்னுகொடை யாளர்பயில் வண்டிருவை யாறே. | 07
|
346 | இரக்கமில் குணத்தொடுல கெங்கும்நலி வெம்போர்
அரக்கன்முடி யத்தலை புயத்தொடு மடங்கத்
துரக்கவிர லிற்சிறிது வைத்தவ ரிடஞ்சீர்
வரக்கருணை யாளர்பயில் வண்டிருவை யாறே. | 08
|
347 | பருத்துருவ தாகிவிண் ணடைந்தவனொர் பன்றிப்
பெருத்துருவ தாயுல கிடந்தவனு மென்றுங்
கருத்துரு வொணாவகை நிமிர்ந்தவ னிடங்கார்
வருத்துவகை தீர்கொள்பொழில் வண்டிருவை யாறே. | 09
|
348 | பாக்கியம தொன்றுமில் சமண்பதகர் புத்தர்
சாக்கியர்க ளென்றுடல் பொதிந்துதிரி வார்தம்
நோக்கரிய தத்துவ னிடம்படியின் மேலால்
மாக்கமுற நீடுபொழில் வண்டிருவை யாறே. | 10
|
349 | வாசமலி யும்பொழில்கொள் வண்டிருவை யாற்றுள்
ஈசனை யெழிற்புகலி மன்னவன்மெய்ஞ் ஞானப்
பூசுர னுரைத்ததமிழ் பத்துமிவை வல்லார்
நேசமலி பத்தரவர் நின்மல னடிக்கே. | 11
|