திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருப்புறம்பயம் தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 30வது திருப்பதிகம்)

2.30 திருப்புறம்பயம் - திருவிராகம்

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

மறம்பய மலைந்தவர் மதிற்பரி சறுத்தனை	
நிரம்பசுமை செம்மையொ டிசைந்துனது நீர்மை	
திறம்பய னுறும்பொருள் தெரிந்துணரு நால்வர்க்	
கறம்பய னுரைத்தனை புரம்பயம் அமர்ந்தோய்.	2.30.1
	
விரித்தனை திருச்சடை யரித்தொழுகு வெள்ளம்	
தரித்தனை யதன்றியும் மிகப்பெரிய காலன்	
எருத்திற வுதைத்தனை இலங்கிழையொர் பாகம்	
பொருத்துதல் கருத்தினை புறம்பயம் அமர்ந்தோய்.	2.30.2
	
விரிந்தனை குவிந்தனை விழுங்குயி ருமிழ்ந்தனை	
திரிந்தனை குருந்தொசி பெருந்தகையு நீயும்	
பிரிந்தனை புணர்ந்தனை பிணம்புகு மயானம்	
புரிந்தனை மகிழ்ந்தனை புரம்பயம் அமர்ந்தோய்.	2.30.3
	
வளங்கெழு கதும்புன லொடுஞ்சடை யொடுங்கத்	
துளங்கம ரிளம்பிறை சுமந்தது விளங்க	
உளங்கொள வளைந்தவர் சுடுஞ்சுடலை நீறு	
புளங்கொள விளங்கினை புரம்பயம் அமர்ந்தோய்.	2.30.4
	
பெரும்பிணி பிறப்பினொ டிறப்பிலையொர் பாகம்	
கரும்பொடு படுஞ்சொலின் மடந்தையை மகிழ்ந்தோய்	
சுரும்புண அரும்பவிழ் திருந்தியெழு கொன்றை	
விரும்பினை புறம்பயம் அமர்ந்தஇறை யோனே.	2.30.5
	
அனற்படு தடக்கையவ ரெத்தொழில ரேனும்	
நினைப்புடை மனத்தவர் வினைப்பகையு நீயே	
தனற்படு சுடர்ச்சடை தனிப்பிறையொ டொன்றப்	
புனற்படு கிடைக்கையை புறம்பயம் அமர்ந்தோய்.	2.30.6
	
மறத்துறை மறுத்தவர் தவத்தடிய ருள்ளம்	
அறத்துறை யொறுத்துன தருட்கிழமை பெற்றோர்	
திறத்துள திறத்தினை மதித்தகல நின்றும்	
புறத்துள திறத்தினை புறம்பயம் அமர்ந்தோய்.	2.30.7
	
இலங்கைய ரிறைஞ்சிறை விலங்கலின் முழங்க	
உலங்கெழு தடக்கைக ளடர்த்திடலு மஞ்சி	
வலங்கொள எழுந்தவன் நலங்கவின அஞ்சு	
புலங்களை விலங்கினை புறம்பயம் அமர்ந்தோய்.	2.30.8
	
வடங்கெட நுடங்குண இடந்தவிடை யல்லிக்	
கிடந்தவன் இருந்தவன் அளந்துணர லாகார்	
தொடர்ந்தவ ருடம்பொடு நிமிர்ந்துடன் வணங்கப்	
புடங்கருள்செய் தொன்றினை புறம்பயம் அமர்ந்தோய்.	2.30.9
	
விடக்கொருவர் நன்றென விடக்கொருவர் தீதென	
உடற்குடை களைந்தவ ருடம்பினை மறைக்கும்	
படக்கர்கள் பிடக்குரை படுத்துமையொர் பாகம்	
அடக்கினை புறம்பயம் அமர்ந்தவுர வோனே.	2.30.10
	
கருங்கழி பொருந்திரை கரைக்குலவு முத்தம்	
தருங்கழு மலத்திறை தமிழ்க்கிழமை ஞானன்	
சுரும்பவிழ் புறம்பயம் அமர்ந்த தமிழ்வல்லார்	
பெரும்பிணி மருங்கற ஒருங்குவர் பிறப்பே.	2.30.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சாட்சிவரதநாதர், தேவியார் - கரும்பன்னசொல்லம்மை. - திருச்சிற்றம்பலம் -


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page