திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(இரண்டாம் திருமுறை)

2.26 திருநெல்வாயில்


பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

273

புடையி னார்புள்ளி கால்பொ ருந்திய
மடையி னார்மணி நீர்நெல் வாயிலார்
நடையி னால்விரற் கோவ ணந்நயந்
துடையி னாரெம துச்சி யாரே.

01
274

வாங்கி னார்மதில் மேற்க ணைவெள்ளந்
தாங்கி னார்தலை யாய தன்மையர்
நீங்கு நீரநெல் வாயி லார்தொழ
ஓங்கி னாரெம துச்சி யாரே.

2
275

நிச்ச லேத்தும்நெல் வாயி லார்தொழ
இச்சை யாலுறை வாரெம் மீசனார்
கச்சை யாவதோர் பாம்பி னார்கவின்
இச்சை யாரெம துச்சி யாரே.

03
276

மறையி னார்மழு வாளி னார்மல்கு
பிறையி னார்பிறை யோடி லங்கிய
நிறையி னாரநெல் வாயிலார் தொழும்
இறைவ னாரெம துச்சி யாரே.

04
277

விருத்த னாகிவெண் ணீறு பூசிய
கருத்த னார்கன லாட்டு கந்தவர்
நிருத்த னாரநெல் வாயில் மேவிய
ஒருத்த னாரெம துச்சி யாரே.

05
278

காரி னார்கொன்றைக் கண்ணி யார்மல்கு
பேரி னார்பிறை யோடி லங்கிய
நீரி னாரநெல் வாயிலார் தொழும்
ஏரி னாரெம துச்சி யாரே.

06
279

ஆதி யாரந்த மாயி னார்வினை
கோதி யார்மதில் கூட்ட ழித்தவர்
நீதி யாரநெல் வாயி லார்மறை
ஓதி யாரெம துச்சி யாரே.

07
280

பற்றி னான்அரக் கன்க யிலையை
ஒற்றி னாரொரு கால்வி ரலுற
நெற்றி யாரநெல் வாயி லார்தொழும்
பெற்றி யாரெம துச்சி யாரே.

08
281

நாடி னார்மணி வண்ணன் நான்முகன்
கூடி னார்குறு காத கொள்கையர்
நீடி னாரநெல் வாயி லார்தலை
ஓடி னாரெம துச்சி யாரே.

09
282

குண்ட மண்துவர்க் கூறை மூடர்சொல்
பண்ட மாகவை யாத பண்பினர்
விண்ட யங்குநெல் வாயி லார்நஞ்சை
உண்ட கண்டரெம் உச்சி யாரே.

10
283

நெண்ப யங்குநெல் வாயி லீசனைச்
சண்பை ஞானசம் பந்தன் சொல்லிவை
பண்ப யன்கொளப் பாட வல்லவர்
விண்ப யன்கொளும் வேட்கை யாளரே.

11

திருச்சிற்றம்பலம்
Back to Complete Second thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page