|
165 |
அயிலாரும் அம்பத னாற்புர மூன்றெய்து
குயிலாரும் மென்மொழி யாளொரு கூறாகி
மயிலாரும் மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே. | 01 |
166 | விதியானை விண்ணவர் தாந்தொழு தேத்திய
நெதியானை நீள்சடை மேல்நிகழ் வித்தவான்
மதியானை வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப்
பதியானைப் பாடவல் லார்வினை பாறுமே. | 02
|
167 | எய்ப்பானார்க் கின்புறு தேனளித் தூறிய
இப்பாலா யெனையும் ஆள வுரியானை
வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி
மெய்ப்பானை மேவிநின் றார்வினை வீடுமே. | 03
|
168 | விடையானை மேலுல கேழுமிப் பாரெலாம்
உடையானை ஊழிதோ றூழி உளதாய
படையானைப் பண்ணிசை பாடு மணஞ்சேரி
அடைவானை யடையவல் லார்க்கில்லை யல்லலே. | 04
|
169 | எறியார்பூங் கொன்றையி னோடும் இளமத்தம்
வெறியாருஞ் செஞ்சடை யார மிலைத்தானை
மறியாருங் கையுடை யானை மணஞ்சேரிச்
செறிவானைச் செப்பவல் லார்க்கிடர் சேராவே. | 05
|
170 | மொழியானை முன்னொரு நான்மறை யாறங்கம்
பழியாமைப் பண்ணிசை யான பகர்வானை
வழியானை வானவ ரேத்து மணஞ்சேரி
இழியாமை யேத்தவல் லார்க்கெய்தும் இன்பமே. | 06
|
171 | எண்ணானை யெண்ணமர் சீரிமை யோர்கட்குக்
கண்ணானைக் கண்ணொரு மூன்று முடையானை
மண்ணானை மாவயல் சூழ்ந்த மணஞ்சேரிப்
பெண்ணானைப் பேசநின் றார்பெரி யோர்களே. | 07
|
172 | எடுத்தானை யெழில்முடி யெட்டும் இரண்டுந்தோள்
கெடுத்தானைக் கேடிலாச் செம்மை யுடையானை
மடுத்தார வண்டிசை பாடும் மணஞ்சேரி
பிடித்தாரப் பேணவல் லார்பெரியோர்களே. | 08
|
173 | சொல்லானைத் தோற்றங்கண் டானும் நெடுமாலுங்
கல்லானைக் கற்றன சொல்லித் தொழுதோங்க
வல்லார்நன் மாதவ ரேத்து மணஞ்சேரி
எல்லாமாம் எம்பெரு மான்கழல் ஏத்துமே. | 09
|
174 | சற்றேயுந் தாமறி வில்சமண் சாக்கியர்
சொற்றேயும் வண்ணமொர் செம்மை உடையானை
வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி
பற்றாக வாழ்பவர் மேல்வினை பற்றாவே. | 10
|
175 | கண்ணாருங் காழியர் கோன்கருத் தார்வித்த
தண்ணார்சீர் ஞானசம் பந்தன் தமிழ்மாலை
மண்ணாரும் மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி
பண்ணாரப் பாடவல் லார்க்கில்லை பாவமே. | 11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மணவாளநாயகர், தேவியார் - யாழ்மொழியம்மை.