திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருக்காறாயில் தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 15வது திருப்பதிகம்)

2.15 திருக்காறாயில்

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

நீரானே நீள்சடை மேலொர் நிரை கொன்றைத்	
தாரானே தாமரை மேலயன் தான்தொழும்	
சீரானே சீர்திக ழுந்திருக் காறாயில் 	
ஊரானே யென்பவர் ஊனமி லாதாரே.	2.15.1
	
மதியானே வரியர வோடுடன் மத்தஞ்சேர்	
விதியானே விதியுடை வேதியர் தாந்தொழும்	
நெதியானே நீர்வயல் சூழ்திருக் காறாயில்	
பதியானே யென்பவர் பாவமி லாதாரே.	2.15.2
	
விண்ணானே விண்ணவ ரேத்திவி ரும்புஞ்சீர்	
மண்ணானே மண்ணிடை வாழுமு யிர்க்கெல்லாம்	
கண்ணானே கடிபொழில் சூழ்திருக் காறாயில்	
எண்ணானே யென்பவர் ஏதமி லாதாரே.	2.15.3
	
தாயானே தந்தையு மாகிய தன்மைகள்	
ஆயானே ஆயநல் லன்பர்க்க ணியானே	
சேயானே சீர்திக ழுந்திருக் காறாயில்	
மேயானே யென்பவர் மேல்வினை மேவாவே.	2.15.4
	
கலையானே கலைமலி செம்பொற் கயிலாய	
மலையானே மலைபவர் மும்மதில் மாய்வித்த	
சிலையானே சீர்திக ழுந்திருக் காறாயில்	
நிலையானே யென்பவர் மேல்வினை நில்லாவே.	2.15.5
	
ஆற்றானே ஆறணி செஞ்சடை யாடர	
வேற்றானே யேழுல கும்மிமை யோர்களும்	
போற்றானே பொழில்திக ழுந்திருக் காறாயில்	
நீற்றானே யென்பவர் மேல்வினை நில்லாவே.	2.15.6
	
சேர்த்தானே தீவினை தேய்ந்தறத் தேவர்கள்	
ஏத்தானே யேத்துநன் மாமுனி வர்க்கிடர்	
காத்தானே கார்வயல் சூழ்திருக் காறாயில்	
ஆர்த்தானே யென்பவர் மேல்வினை யடராவே.	2.15.7
	
கடுத்தானே காலனைக் காலாற் கயிலாயம்	
எடுத்தானை யேதமா கம்முனி வர்க்கிடர்	
கெடுத்தானே கேழ்கிள ருந்திருக் காறாயில்	
அடுத்தானே யென்பவர் மேல்வினை யடராவே.	2.15.8
	
பிறையானே பேணிய பாடலொ டின்னிசை	
மறையானே மாலொடு நான்முகன் காணாத	
இறையானே யெழில்திக ழுந்திருக் காறாயில்	
உறைவானே யென்பவர் மேல்வினை ஓடுமே.	2.15.9
	
செடியாரும் புன்சமண் சீவரத் தார்களும்	
படியாரும் பாவிகள் பேச்சுப் பயனில்லை	
கடியாரும் பூம்பொழில் சூழ்திருக் காறாயில்	
குடியாருங் கொள்கையி னார்க்கில்லை குற்றமே.	2.15.10
	
ஏய்ந்தசீ ரெழில்திக ழுந்திருக் காறாயில்	2.15.11
ஆய்ந்தசீ ரானடி யேத்தி அருள்பெற்ற	
பாய்ந்தநீர்க் காழியுள் ஞானசம் பந்தன்சொல்	
வாய்ந்தவா றேத்துவார் வானுல காள்வாரே.	

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.    
சுவாமிபெயர் - கண்ணாயிரநாதர், தேவியார் - கயிலாயநாயகியம்மை. - திருச்சிற்றம்பலம் -


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page