திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருக்கோழம்பம் தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 13வது திருப்பதிகம்)

2.13 திருக்கோழம்பம்

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

நீற்றானை நீள்சடை மேல்நிறை வுள்ளதோர்	
ஆற்றானை அழகமர் மென்முலை யாளையோர்	
கூற்றானைக் குளிர்பொழிற் கோழம்பம் மேவிய	
ஏற்றானை யேத்துமின் நும்மிடர் ஏகவே.		2.13.1

மையான கண்டனை மான்மறி யேந்திய	
கையானைக் கடிபொழிற் கோழம்பம் மேவிய	
செய்யானைத் தேன்நெய்பா லுந்திகழ்ந் தாடிய	
மெய்யானை மேவுவார் மேல்வினை மேவாவே.	2.13.2
	
ஏதனை யேதமி லாஇமை யோர்தொழும்	
வேதனை வெண்குழை தோடுவி ளங்கிய	
காதனைக் கடிபொழிற் கோழம்பம் மேவிய	
நாதனை யேத்துமின் நும்வினை நையவே.	2.13.3
	
சடையானைத் தண்மல ரான்சிர மேந்திய	
விடையானை வேதமும் வேள்வியு ஆயநன்	
குடையானைக் குளிர்பொழில் சூழ்திருக் கோழம்பம்	
உடையானை உள்குமின் உள்ளங்கு ளிரவே.	2.13.4
	
காரானைக் கடிகமழ் கொன்றையம் போதணி	
தாரானைத் தையலோர் பால்மகிழ்ந் தோங்கிய	
சீரானைச் செறிபொழிற் கோழம்பம் மேவிய	
ஊரானை யேத்துமின் நும்மிடர் ஒல்கவே.	2.13.5
	
பண்டாலின் நீழலா னைப்பரஞ் சோதியை	
விண்டார்கள் தம்புரம் மூன்றுட னேவேவக்	
கண்டானைக் கடிகமழ் கோழம்பங் கோயிலாக்	
கொண்டானைக் கூறுமின் உள்ளங் குளிரவே.	2.13.6
	
சொல்லானைச் சுடுகணை யால்புரம் மூன்றெய்த	
வில்லானை வேதமும் வேள்வியு மானானைக்	
கொல்லானை உரியானைக் கோழம்பம் மேவிய	
நல்லானை யேத்துமின் நும்மிடர் நையவே.	2.13.7
	
விற்றானை வல்லரக் கர்விறல் வேந்தனைக்	
குற்றானைத் திருவிர லாற்கொடுங் காலனைச்	
செற்றானைச் சீர்திக ழுந்திருக் கோழம்பம்	
பற்றானைப் பற்றுவார் மேல்வினை பற்றாவே.	2.13.8
	
நெடியானோ டயனறி யாவகை நின்றதோர்	
படியானைப் பண்டரங்க வேடம்ப யின்றானைக்	
கடியாருங் கோழம்பம் மேவிய வெள்ளேற்றின்	
கொடியானைக் கூறுமின் உள்ளங் குளிரவே.	2.13.9
	
புத்தருந் தோகையம் பீலிகொள் பொய்ம்மொழிப்	
பித்தரும் பேசுவ பேச்சல்ல பீடுடைக்	
கொத்தலர் தண்பொழிற் கோழம்பம் மேவிய	
அத்தனை யேத்துமின் அல்லல் அறுக்கவே.	2.13.10
	
தண்புன லோங்குதண் ணந்தராய் மாநகர்	
நண்புடை ஞானசம் பந்தன்நம் பான்உறை	
விண்பொழிற் கோழம்பம் மேவிய பத்திவை	
பண்கொளப் பாடவல் லார்க்கில்லை பாவமே.	2.13.11

	        - திருச்சிற்றம்பலம் -
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கோகுலேசுவரர், தேவியார் - சவுந்தரியம்மை.


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page