திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
சீகாழி (சீர்காழி) தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 11வது திருப்பதிகம்)

2.11 சீகாழி

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

நல்லானை நான்மறை யோடிய லாறங்கம்	
வல்லானை வல்லவர் பான்மலிந் தோங்கிய	
சொல்லானைத் தொன்மதிற் காழியே கோயிலாம்	
இல்லானை யேத்தநின் றார்க்குள தின்பமே.	2.11.1
	
நம்மான மாற்றி நமக்கரு ளாய்நின்ற	
பெம்மானைப் பேயுடன் ஆடல் புரிந்தானை	
அம்மானை அந்தணர் சேரு மணிகாழி	
எம்மானை யேத்தவல் லார்க்கிட ரில்லையே.	2.11.2
	
அருந்தானை யன்புசெய் தேத்தகில் லார்பால்	
பொருந்தானைப் பொய்யடி மைத்தொழில் செய்வாருள்	
விருந்தானை வேதிய ரோதி மிடைகாழி	
இருந்தானை யேத்துமின் நும்வினை யேகவே.	2.11.3
	
புற்றானைப் புற்றர வம்அரை யின்மிசைச்	
சுற்றானைத் தொண்டுசெய் வாரவர் தம்மொடும்	
அற்றானை அந்தணர் காழி அமர்கோயில்	
பற்றானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே.	2.11.4
	
நெதியானை நெஞ்சிடங் கொள்ள நினைவார்தம்	
விதியானை விண்ணவர் தாம்வியந் தேத்திய	
கதியானைக் காருல வும்பொழிற் காழியாம்	
பதியானைப் பாடுமின் நும்வினை பாறவே.	2.11.5
	
செப்பான மென்முலை யாளைத் திகழ்மேனி	
வைப்பானை வார்கழ லேத்தி நினைவார்தம்	
ஒப்பானை ஓதம் உலாவு கடற்காழி	
மெய்ப்பானை மேவிய மாந்தர் வியந்தாரே.	2.11.6
	
துன்பானைத் துன்பம் அழித்தரு ளாக்கிய	
இன்பானை யேழிசை யின்னிலை பேணுவார்	
அன்பானை அணிபொழிற் காழி நகர்மேய	
நம்பானை நண்ணவல் லார்வினை நாசமே.	2.11.7
	
குன்றானைக் குன்றெடுத் தான்புயம் நாலைந்தும்	
வென்றானை மென்மல ரானொடு மால்தேட	
நின்றானை நேரிழை யாளொடுங் காழியுள்	
நன்றானை நம்பெரு மானை நணுகுமே.	2.11.8
	
சாவாயும் வாதுசெய் சாவகர் சாக்கியர்	
மேவாத சொல்லவை கேட்டு வெகுளேன்மின்	
பூவாய கொன்றையி னானைப் புனற்காழிக்	
கோவாய கொள்கையி னானடி கூறுமே.	2.11.10
	
கழியார்சீ ரோதமல் குங்கடற் காழியுள்	
ஒழியாது கோயில்கொண் டானை யுகந்துள்கித்	
தழியார்சொல் ஞானசம் பந்தன் தமிழார	
மொழிவார்கள் மூவுல கும்பெறு வார்களே.	2.10.11
	
இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் மறைந்து போயிற்று.	
	        - திருச்சிற்றம்பலம் -


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page