திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருமங்கலக்குடி தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 10வது திருப்பதிகம்)

2.10 திருமங்கலக்குடி

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

சீரி னார்மணி யும்மகில் சந்துஞ்செ றிவரை	
வாரி நீர்வரு பொன்னிவ டமங்க லக்குடி	
நீரின் மாமுனி வன்நெடுங் கைகொடு நீர்தனைப்	
பூரித் தாட்டியர்ச் சிக்கஇ ருந்த புராணனே.	2.10.1
	
பணங்கொ ளாடர வல்குல்நல் லார்பயின் றேத்தவே	
மணங்கொள் மாமயி லாலும்பொ ழில்மங்க லக்குடி	
இணங்கி லாமறை யோரிமை யோர்தொழு தேத்திட	
அணங்கி னோடிருந் தானடி யேசர ணாகுமே.	2.10.2
	
கருங்கை யானையின் ஈருரி போர்த்திடு கள்வனார்	
மருங்கெ லாம்மண மார்பொழில் சூழ்மங்க லக்குடி	
அரும்பு சேர்மலர்க் கொன்றையி னானடி யன்பொடு	
விரும்பி யேத்தவல் லார்வினை யாயின வீடுமே.	2.10.3
	
பறையி னோடொலி பாடலும் ஆடலும் பாரிடம்	
மறையி னோடியல் மல்கிடு வார்மங்க லக்குடிக்	
குறைவி லாநிறை வேகுண மில்குண மேயென்று	
முறையி னால்வணங் கும்மவர் முன்னெறி காண்பரே.	2.10.4
	
ஆனி லங்கிளர் ஐந்தும் அவிர்முடி யாடியோர்	
மானி லங்கையி னான்மண மார்மங்க லக்குடி	
ஊனில் வெண்டலைக் கையுடை யானுயர் பாதமே	
ஞான மாகநின் றேத்தவல் லார்வினை நாசமே.	2.10.5
	
தேனு மாயமு தாகிநின் றாதெளி சிந்தையுள்	
வானு மாய்மதி சூடவல் லான்மங்க லக்குடிக்	
கோனை நாடொறும் ஏத்திக் குணங்கொடு கூறுவார்	
ஊனமானவை போயறும் உய்யும்வ கையதே.	2.10.6
	
வேள் படுத்திடு கண்ணினன் மேருவில் லாகவே	
வாள ரக்கர் புரமெரித் தான்மங்க லக்குடி	
ஆளும் ஆதிப்பி ரானடி கள்ளடைந் தேத்தவே	
கோளு நாளவை போயறுங் குற்றமில் லார்களே.	2.10.7
	
பொலியும் மால்வரை புக்கெடுத் தான்புகழ்ந் தேத்திட	
வலியும் வாளொடு நாள்கொடுத் தான்மங்க லக்குடிப்	
புலியின் ஆடையி னானடி யேத்திடும் புண்ணியர்	
மலியும் வானுல கம்புக வல்லவர் காண்மினே.	2.10.8
	
ஞாலம் முன்படைத் தான்நளிர் மாமலர் மேலயன்	
மாலுங் காணவொ ணாஎரி யான்மங்க லக்குடி	
ஏல வார்குழ லாளொரு பாகமி டங்கொடு	
கோல மாகிநின் றான்குணங் கூறுங் குணமதே.	2.10.9
	
மெய்யின் மாசினர் மேனிவி ரிதுவ ராடையர்	
பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர்மங்க லக்குடிச்	
செய்ய மேனிச்செ ழும்புனற் கங்கைசெ றிசடை	
ஐயன் சேவடி யேத்தவல் லார்க்கழ காகுமே.	2.10.10
	
மந்த மாம்பொழில் சூழ்மங்க லக்குடி மன்னிய	
எந்தை யையெழி லார்பொழிற் காழியர் காவலன்	
சிந்தை செய்தடி சேர்த்திடு ஞானசம் பந்தன்சொல்	
முந்தி யேத்தவல் லாரிமை யோர்முத லாவரே.	2.10.11                        

	    - திருச்சிற்றம்பலம் -
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - புராணவரதேசுவரர், தேவியார் - மங்களநாயகியம்மை.


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page