திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருமழபாடி தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 9வது திருப்பதிகம்)

2.9 திருமழபாடி

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

களையும் வல்வினை யஞ்சல்நெஞ் சேகரு தார்புரம்	
உளையும் பூசல்செய் தானுயர் மால்வரை நல்விலா	
வளைய வெஞ்சரம் வாங்கியெய் தான்மதுத் தும்பிவண்	
டளையுங் கொன்றையந் தார்மழ பாடியுள் அண்ணலே.	2.9.1
	
காச்சி லாதபொன் நோக்குங்க னவயி ரத்திரள்	
ஆச்சி லாதப ளிங்கினன் அஞ்சுமுன் ஆடினான்	
பேச்சி னாலுமக் காவதென் பேதைகாள் பேணுமின்	
வாச்ச மாளிகை சூழ்மழ பாடியை வாழ்த்துமே.	2.9.2
	
உரங்கெ டுப்பவன் உம்பர்க ளாயவர் தங்களைப்	
பரங்கெ டுப்பவன் நஞ்சையுண் டுபக லோன்றனை	
முரண்கெ டுப்பவன் முப்புரந் தீயெழச் செற்றுமுன்	
வரங்கொ டுப்பவன் மாமழ பாடியுள் வள்ளலே.	2.9.3
	
பள்ள மார்சடை யிற்புடை யேயடை யப்புனல்	
வெள்ளம் ஆதரித் தான்விடை யேறிய வேதியன்	
வள்ளல் மாமழ பாடியுள் மேயம ருந்தினை	
உள்ளம் ஆதரி மின்வினை யாயின ஓயவே.	2.9.4
	
தேனு லாமலர் கொண்டுமெய்த் தேவர்கள் சித்தர்கள்	
பால்நெய் அஞ்சுடன் ஆட்டமுன் ஆடிய பால்வணன்	
வான நாடர்கள் கைதொழு மாமழ பாடியெம்	
கோனை நாடொறுங் கும்பிட வேகுறி கூடுமே.	2.9.5
	
தெரிந்த வன்புரம் மூன்றுடன் மாட்டிய சேவகன்	
பரிந்து கைதொழு வாரவர் தம்மனம் பாவினான்	
வரிந்த வெஞ்சிலை யொன்றுடை யான்மழ பாடியைப்	
புரிந்து கைதொழு மின்வினை யாயின போகுமே.	2.9.6
	
சந்த வார்குழ லாளுமை தன்னொரு கூறுடை	
எந்தை யான்இமை யாதமுக் கண்ணினன் எம்பிரான்	
மைந்தன் வார்பொழில் சூழ்மழ பாடிம ருந்தினைச்	
சிந்தி யாவெழு வார்வினை யாயின தேயுமே.	2.9.7
	
இரக்கம் ஒன்றுமி லான் இறையான்திரு மாமலை	
உரக்கை யாலெடுத் தான்தன தொண்முடி பத்திற	
விரல்த லைந்நிறு வியுமை யாளொடு மேயவன்	
வரத்தை யேகொடுக் கும்மழ பாடியுள் வள்ளலே.	2.9.8
	
ஆலம் உண்டமு தம்மம ரர்க்கருள் அண்ணலார்	
காலன் ஆருயிர் வீட்டிய மாமணி கண்டனார்	
சால நல்லடி யார்தவத் தார்களுஞ் சார்விடம்	
மால யன்வணங் கும்மழ பாடியெம் மைந்தனே.	2.9.9
	
கலியின் வல்லம ணுங்கருஞ் சாக்கியப் பேய்களும்	
நலியும் நாள்கெடுத் தாண்டஎன் நாதனார் வாழ்பதி	
பலியும் பாட்டொடு பண்முழ வும்பல வோசையும்	
மலியும் மாமழ பாடியை வாழ்த்திவ ணங்குமே.	2.9.10
	
மலியு மாளிகை சூழ்மழ பாடியுள் வள்ளலைக்	2.9.11
கலிசெய் மாமதில் சூழ்கடற் காழிக் கவுணியன்	
………………………………………………………………….	
………………………………………………………………….	

இப்பதிகத்தின் 11-ம் செய்யுளின் பின்னிரண்டடிகள் சிதைவுற்றன.	

	        - திருச்சிற்றம்பலம் -
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வச்சிரத்தம்பேசுவரர், தேவியார் - அழகாம்பிகையம்மை.


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page