திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருச்சிக்கல் தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 8வது திருப்பதிகம்)

2.8 திருச்சிக்கல்

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

வானுலா வும்மதி வந்துலா வும்மதில் மாளிகை	
தேனுலா வும்மலர்ச் சோலைமல் குந்திகழ் சிக்கலுள்	
வேனல்வே ளைவிழித் திட்டவெண் ணெய்ப்பெரு மானடி	
ஞானமா கந்நினை வார்வினை யாயின நையுமே.	2.8.1
	
மடங்கொள்வா ளைகுதி கொள்ளும் மணமலர்ப் பொய்கைசூழ்	
திடங்கொள் மாமறை யோரவர் மல்கிய சிக்கலுள்	
விடங்கொள் கண்டத்து வெண்ணெய்ப்பெரு மானடி மேவியே	
அடைந்து வாழுமடி யாரவர் அல்லல் அறுப்பரே.	2.8.2
	
நீலநெய் தல்நில விம்மல ருஞ்சுனை நீடிய	
சேலுமா லுங்கழ னிவ்வள மல்கிய சிக்கலுள்	
வேலவொண் கண்ணியி னாளையொர் பாகன்வெண் ணெய்ப்பிரான்	
பாலவண் ணன்கழ லேத்தநம் பாவம்ப றையுமே.	2.8.3
	
கந்தமுந் தக்கைதை பூத்துக் கமழ்ந்து சேரும்பொழிற்	
செந்துவண் டின்னிசை பாடல்மல் குந்திகழ் சிக்கலுள்	
வெந்தவெண் ணீற்றண்ணல் வெண்ணெய்ப்பி ரான்விரை யார்கழல்	
சிந்தைசெய் வார்வினை யாயின தேய்வது திண்ணமே.	2.8.4
	
மங்குல்தங் கும்மறை யோர்கள்மா டத்தய லேமிகு	
தெங்குதுங் கப்பொழிற் செல்வமல் குந்திகழ் சிக்கலுள்	
வெங்கண்வெள் ளேறுடை வெண்ணெய்ப்பி ரானடி மேவவே	
தங்குமேன் மைசர தந்திரு நாளுந்த கையுமே.	2.8.5
	
வண்டிரைத் தும்மது விம்மிய மாமலர்ப் பொய்கைசூழ்	
தெண்டிரைக் கொள்புனல் வந்தொழு கும்வயற் சிக்கலுள்	
விண்டிரைத் தம்மல ராற்றிகழ் வெண்ணெய்ப் பெருமானடி	
கண்டிரைத் தும்மன மேமதி யாய்கதி யாகவே.	2.8.6
	
முன்னுமா டம்மதில் மூன்றுட னேயெரி யாய்விழத்	
துன்னுவார் வெங்கணை யொன்று செலுத்திய சோதியான்	
செந்நெலா ரும்வயற் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி	
உன்னிநீ டம்மன மேநினை யாய்வினை ஓயவே.	2.8.7
	
தெற்ற லாகிய தென்னிலங் கைக்கிறை வன்மலை	
பற்றி னான்முடி பத்தொடு தோள்கள் நெரியவே	
செற்ற தேவன்நஞ் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி	
உற்று நீநினை வாய்வினை யாயின ஓயவே.	2.8.8
	
மாலி னோடரு மாமறை வல்லமு னிவனும்	
கோலி னார்குறு கச்சிவன் சேவடி கோலியும்	
சீலந் தாமறி யார்திகழ் சிக்கல்வெண் ணெய்ப்பிரான்	
பாலும் பன்மலர் தூவப் பறையும்நம் பாவமே.	2.8.9
	
பட்டை நற்றுவ ராடையி னாரொடும் பாங்கிலாக்	
கட்ட மண்கழுக் கள்சொல்லி னைக்கரு தாதுநீர்	
சிட்டன் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மான்செழு மாமறைப்	
பட்டன் சேவடி யேபணி மின்பிணி போகவே.	2.8.10
	
கந்த மார்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்நல்	2.8.11
செந்தண் பூம்பொழிற் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடிச்	
சந்த மாச்சொன்ன செந்தமிழ் வல்லவர் வானிடை	
வெந்த நீறணி யும்பெரு மானடி மேவரே.	

	        - திருச்சிற்றம்பலம் -
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நவநீதநாதர், தேவியார் - வேனெடுங்கண்ணியம்மை.


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page