திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருவாஞ்சியம் தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 7வது திருப்பதிகம்)

2.7 திருவாஞ்சியம்

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்	
பொன்னி யன்றசடை யிற்பொலி வித்தபு ராணனார்	
தென்ன வென்றுவரி வண்டிசை செய்திரு வாஞ்சியம்	
என்னை யாளுடை யானிட மாகவு கந்ததே.	2.7.1
	
கால காலர்கரி கானிடை மாநட மாடுவர்	
மேலர் வேலைவிட முண்டிருள் கின்றமி டற்றினர்	
மாலை கோலமதி மாடமன் னுந்திரு வாஞ்சியம்	
ஞாலம் வந்துபணி யப்பொலி கோயில் நயந்ததே.	2.7.2
	
மேவிலொன் றர்விரி வுற்ற இரண்டினர் மூன்றுமாய்	
நாவின் நாலர்உட லஞ்சினர் ஆறர்ஏ ழோசையர்	
தேவில் எட்டர்திரு வாஞ்சிய மேவிய செல்வனார்	
பாவந் தீர்ப்பர்பழி போக்குவர் தம்அடி யார்கட்கே.	2.7.3
	
சூல மேந்திவளர் கையினர் மெய்சுவண் டாகவே	
சால நல்லபொடிப் பூசுவர் பேசுவர் மாமறை	
சீல மேவுபுக ழாற்பெரு குந்திரு வாஞ்சியம்	
ஆல முண்டஅடி கள்ளிட மாக அமர்ந்ததே.	2.7.4
	
கையி லங்குமறி யேந்துவர் காந்தளம் மெல்விரல்	
தையல் பாகமுடை யார்அடை யார்புரஞ் செற்றவர்	
செய்ய மேனிக்கரி யம்மிடற் றார்திரு வாஞ்சியத்	
தையர் பாதமடை வார்க்கடை யாஅரு நோய்களே.	2.7.5
	
அரவம் பூண்பரணி யுஞ்சிலம் பார்க்க அகந்தொறும்	
இரவில் நல்லபலி பேணுவர் நாணிலர் நாமமே	
பரவு வார்வினை தீர்க்கநின் றார்திரு வாஞ்சியம்	
மருவியேத் தமட மாதொடு நின்றஎம் மைந்தரே.	2.7.6
	
விண்ணி லானபிறை சூடுவர் தாழ்ந்து விளங்கவே	
கண்ணி னால்அநங் கன்னுட லம்பொடி யாக்கினார்	
பண்ணி லானஇசை பாடல்மல் குந்திரு வாஞ்சியத்	
தண்ண லார்தம்அடி போற்றவல் லார்க்கில்லை அல்லலே.	2.7.7
	
மாட நீடுகொடி மன்னிய தென்னிலங் கைக்குமன்	
வாடி யூடவரை யாலடர்த் தன்றருள் செய்தவர்	
வேட வேடர்திரு வாஞ்சியம் மேவிய வேந்தரைப்	
பாடநீ டுமனத் தார்வினை பற்றறுப் பார்களே.	2.7.8
	
செடிகொள் நோயின்அடை யார்திறம் பார்செறு தீவினை	
கடிய கூற்றமுங் கண்டக லும்புகல் தான்வரும்	
நெடிய மாலோடயன் ஏத்தநின் றார்திரு வாஞ்சியத்	
தடிகள் பாதமடைந் தாரடி யாரடி யார்கட்கே.	2.7.9
	
பிண்ட முண்டுதிரி வார்பிரி யுந்துவ ராடையார்	
மிண்டர் மிண்டுமொழி மெய்யல பொய்யிலை யெம்மிறை	
வண்டு கெண்டிமரு வும்பொழில் சூழ்திரு வாஞ்சியத்	
தண்ட வாணன்அடி கைதொழு வார்க்கில்லை அல்லலே.	2.7.10
	
தென்றல்துன் றுபொழில் சென்றணை யுந்திரு வாஞ்சியத்	2.7.11
தென்று நின்றஇறை யானையு ணர்ந்தடி யேத்தலால்	
நன்று காழிமறை ஞானசம் பந்தன செந்தமிழ்	
ஒன்றுமுள் ளமுடை யாரடை வாருயர் வானமே.	

	        - திருச்சிற்றம்பலம் -
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வாஞ்சியநாதர், தேவியார் - வாழவந்தநாயகியம்மை.


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page