திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருவான்மியூர் தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 4வது திருப்பதிகம்)

2.4 திருவான்மியூர்

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

கரையு லாங்கட லிற்பொலி சங்கம்வெள் ளிப்பிவன்	
திரையு லாங்கழி மீனுக ளுந்திரு வான்மியூர்	
உரையு லாம்பொரு ளாயுல காளுடை யீர்சொலீர்	
வரையு லாமட மாதுட னாகிய மாண்பதே.	2.4.1
	
சந்து யர்ந்தெழு காரகில் தண்புனல் கொண்டுதம்	
சிந்தை செய்தடி யார்பர வுந்திரு வான்மியூர்ச்	
சுந்த ரக்கழல் மேற்சிலம் பார்க்கவல் லீர்சொலீர்	
அந்தி யின்னொளி யின்நிற மாக்கிய வண்ணமே.	2.4.2
	
கான யங்கிய தண்கழி சூழ்கட லின்புறம்	
தேன யங்கிய பைம்பொழில் சூழ்திரு வான்மியூர்த்	
தோன யங்கம ராடையி னீரடி கேள்சொலீர்	
ஆனையங் கவ்வுரி போர்த்தன லாட வுகந்ததே.	2.4.3
	
மஞ்சு லாவிய மாட மதிற்பொலி மாளிகைச்	
செஞ்சொ லாளர்கள் தாம்பயி லுந்திரு வான்மியூர்	
துஞ்சு வஞ்சிரு ளாடலு கக்கவல் லீர்சொலீர்	
வஞ்ச நஞ்சுண்டு வானவர்க் கின்னருள் வைத்ததே.	2.4.4
	
மண்ணி னிற்புகழ் பெற்றவர் மங்கையர் தாம்பயில்	
திண்ணெ னப்புரி சைத்தொழி லார்திரு வான்மியூர்த்	
துண்ணெ னத்திரி யுஞ்சரி தைத்தொழி லீர்சொலீர்	
விண்ணி னிற்பிறை செஞ்சடை வைத்த வியப்பதே.	2.4.5
	
போது லாவிய தண்பொழில் சூழ்புரி சைப்புறந்	
தீதில் அந்தணர் ஓத்தொழி யாத்திரு வான்மியூர்ச்	
சூது லாவிய கொங்கையொர் பங்குடை யீர்சொலீர்	
மூதெ யில்லொரு மூன்றெரி யூட்டிய மொய்ம்பதே.	2.4.6
	
வண்டி ரைத்த தடம்பொழி லின்நிழற் கானல்வாய்த்	
தெண்டி ரைக்கட லோதமல் குந்திரு வான்மியூர்த்	
தொண்டி ரைத்தெழுந் தேத்திய தொல்கழ லீர்சொலீர்	
பண்டி ருக்கொரு நால்வர்க்கு நீருரை செய்ததே.	2.4.7
	
தக்கில் வந்த தசக்கிரி வன்தலை பத்திறத்	
திக்கில் வந்தல றவ்வடர்த் தீர்திரு வான்மியூர்த்	
தொக்க மாதொடும் வீற்றிருந் தீரரு ளென்சொலீர்	
பக்க மேபல பாரிடம் பேய்கள் பயின்றதே.	2.4.8
	
பொருது வார்கட லெண்டிசை யுந்தரு வாரியால்	
திரித ரும்புகழ் செல்வமல் குந்திரு வான்மியூர்	
சுருதி யாரிரு வர்க்கும் அறிவரி யீர்சொலீர்	
எருது மேல்கொ டுழன்றுகந் தில்பலி யேற்றதே.	2.4.9
	
மைத ழைத்தெழு சோலையின் மாலைசேர் வண்டினம்	
செய்த வத்தொழி லாரிசை சேர்திரு வான்மியூர்	
மெய்த வப்பொடி பூசிய மேனியி னீர்சொலீர்	
கைத வச்சமண் சாக்கியர் கட்டுரைக் கின்றதே.	2.4.10
	
மாதொர் கூறுடை நற்றவ னைத்திரு வான்மியூர்	
ஆதி யெம்பெரு மானருள் செய்ய வினாவுரை	
ஓதி யன்றெழு காழியுள் ஞானசம் பந்தன்சொல்	
நீதி யால்நினை வார்நெடு வானுல காள்வரே.	2.4.11

     இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - மருந்தீசுவரர், தேவியார் - சுந்தரமாது அல்லது சொக்கநாயகி. - திருச்சிற்றம்பலம் -


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page