திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருவலஞ்சுழி தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 2வது திருப்பதிகம்)

2.2 திருவலஞ்சுழி

இசை கேட்க:-

Get the Flash Player to see this player.

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

விண்டெ லாமலரவ் விரை நாறுதண் டேன்விம்மி	
வண்டெ லாம்நசை யாலிசை பாடும் வலஞ்சுழித்	
தொண்டெ லாம்பர வுஞ்சுடர் போலொளி யீர்சொலீர்	
பண்டெ லாம்பலி தேர்ந்தொலி பாடல் பயின்றதே.	2.2.1
	
பாரல் வெண்குரு கும்பகு வாயன நாரையும்	
வாரல் வெண்டிரை வாயிரை தேரும் வலஞ்சுழி	
மூரல் வெண்முறு வல்நகு மொய்யொளி யீர்சொலீர்	
ஊரல் வெண்டலை கொண்டுல கொக்கவு ழன்றதே.	2.2.2
	
கிண்ண வண்ணமல ருங்கிளர் தாமரைத் தாதளாய்	
வண்ண நுண்மணல் மேலனம் வைகும் வலஞ்சுழிச்	
சுண்ண வெண்பொடிக் கொண்டுமெய் பூசவ லீர்சொலீர்	
விண்ண வர்தொழ வெண்டலை யிற்பலி கொண்டதே.	2.2.3
	
கோடெ லாம்நிறை யக்குவ ளைம்மல ருங்குழி	
மாடெ லாம்மலி நீர்மண நாறும் வலஞ்சுழிச்	
சேடெ லாமுடை யீர்சிறு மான்மறி யீர்சொலீர்	
நாடெ லம்அறி யத்தலை யின்னற வேற்றதே.	2.2.4
	
கொல்லை வென்றபுனத் திற்குரு மாமணி கொண்டுபோய்	
வல்லை நுண்மணல் மேலனம் வைகும் வலஞ்சுழி	
முல்லை வெண்முறு வல்நகையா ளொளி யீர்சொலீர்	
சில்லை வெண்டலை யிற்பலி கொண்டுழல் செல்வமே.	2.2.5
	
பூச நீர்பொழி யும்புனற் பொன்னியிற் பன்மலர்	
வாச நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழித்	
தேச நீர்திரு நீர்சிறு மான்மறி யீர்சொலீர்	
ஏச வெண்டலை யிற்பலி கொள்வதி லாமையே.	2.2.6
	
கந்த மாமலர்ச் சந்தொடு காரகி லுந்தழீஇ	
வந்த நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழி	
அந்த நீர்முதல் நீர்நடு வாமடி கேள்சொலீர்	
பந்த நீர்கரு தாதுல கிற்பலி கொள்வதே.	2.2.7
	
தேனுற் றநறு மாமலர்ச் சோலையில் வண்டினம்	
வானுற் றநசை யாலிசை பாடும் வலஞ்சுழிக்	
கானுற் றகளிற் றின்னுரி போர்க்கவல் லீர்சொலீர்	
ஊனுற் றதலை கொண்டுல கொக்கவு ழன்றதே.	2.2.8
	
தீர்த்த நீர்வந் திழிபுனற் பொன்னியிற் பன்மலர்	
வார்த்த நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழி	
ஆர்த்து வந்த அரக்கனை யன்றடர்த் தீர்சொலீர்	
சீர்த்த வெண்டலை யிற்பலி கொள்வதுஞ் சீர்மையே.	2.2.9
	
உரம னுஞ்சடை யீர்விடை யீரும தின்னருள்	
வரம னும்பெற லாவதும் எந்தை வலஞ்சுழிப்	
பிரம னுந்திரு மாலும் அளப்பரி யீர்சொலீர்	
சிரமெ னுங்கல னிற்பலி வேண்டிய செல்வமே.	2.2.10
	
வீடு ஞானமும் வேண்டுதி ரேல்விர தங்களால்	2.2.11
வாடி ஞானமென் னாவதும் எந்தை வலஞ்சுழி	
நாடி ஞானசம் பந்தன செந்தமிழ் கொண்டிசை	
பாடு ஞானம்வல் லாரடி சேர்வது ஞானமே.	

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - காப்பகத்தீசுவரர், தேவியார் - மங்களநாயகியம்மை. - திருச்சிற்றம்பலம் -


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page