|
1 |
செந்நெ லங்கழ னிப்பழ னத்தய லேசெழும்
புன்னை வெண்கிழி யிற்பவ ளம்புரை பூந்தராய்த்
துன்னி நல்லிமை யோர்முடி தோய்கழ லீர்சொலீர்
பின்னு செஞ்சடை யிற்பிறை பாம்புடன் வைத்ததே. | 2.1.1 |
2 | எற்று தெண்டிரை யேறிய சங்கினொ டிப்பிகள்
பொற்றி கழ்கம லப்பழ னம்புகு பூந்தராய்ச்
சுற்றி நல்லிமை யோர்தொழு பொன்கழ லீர்சொலீர்
பெற்ற மேறுதல் பெற்றிமை யோபெரு மானிரே. | 2.1.2
|
3 | சங்கு செம்பவ ளத்திரள் முத்தவை தாங்கொடு
பொங்கு தெண்டிரை வந்தலைக் கும்புனற் பூந்தராய்த்
துங்க மால்களிற் றின்னுரி போர்த்துகந் தீர்சொலீர்
மங்கை பங்கமும் அங்கத்தொ டொன்றிய மாண்பதே. | 2.1.3
|
4 | சேம வன்மதில் பொன்னணி மாளிகை சேணுயர்
பூம ணங்கம ழும்பொழில் சூழ்தரு பூந்தராய்ச்
சோம னும்மர வுந்தொடர் செஞ்சடை யீர்சொலீர்
காமன் வெண்பொடி யாகக் கடைக்கண் சிவந்ததே. | 2.1.4
|
5 | பள்ள மீனிரை தேர்ந்துழ லும்பகு வாயன
புள்ளும் நாடொறுஞ் சேர்பொழில் சூழ்தரு பூந்தராய்த்
துள்ளும் மான்மறி யேந்திய செங்கையி னீர்சொலீர்
வெள்ள நீரொரு செஞ்சடை வைத்த வியப்பதே. | 2.1.5
|
6 | மாதி லங்கிய மங்கைய ராடம ருங்கெலாம்
போதி லங்கம லமது வார்புனற் பூந்தராய்ச்
சோதி யஞ்சுடர் மேனிவெண் ணீறணி வீர்சொலீர்
காதி லங்குழை சங்கவெண் தோடுடன் வைத்ததே. | 2.1.6
|
| இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் மறைந்து போயிற்று. | 2.1.7
|
7 | வருக்க மார்தரு வான்கடு வன்னொடு மந்திகள்
தருக்கொள் சோலை தருங்கனி மாந்திய பூந்தராய்த்
துரக்கும் மால்விடைமேல்வரு வீரடி கேள்சொலீர்
அரக்க னாற்றல் அழித்தரு ளாக்கிய ஆக்கமே. | 2.1.8
|
8 | வரிகொள் செங்கயல் பாய்புனல் சூழ்ந்த மருங்கெலாம்
புரிசை நீடுயர் மாடம் நிலாவிய பூந்தராய்ச்
சுருதி பாடிய பாணியல் தூமொழி யீர்சொலீர்
கரிய மாலயன் நேடியு மைக்கண் டிலாமையே. | 2.1.9
|
9 | வண்ட லங்கழ னிம்மடை வாளைகள் பாய்புனற்
புண்ட ரீகம லர்ந்து மதுத்தரு பூந்தராய்த்
தொண்டர் வந்தடி போற்றிசெய் தொல்கழ லீர்சொலீர்
குண்டர் சாக்கியர் கூறிய தாங்குறி யின்மையே. | 2.1.10
|
10 | மகர வார்கடல் வந்தண வும்மணற் கானல்வாய்ப்
புகலி ஞானசம் பந்தன் எழில்மிகு பூந்தராய்ப்
பகவ னாரைப் பரவுசொல் மாலைபத் தும்வல்லார்
அகல்வர் தீவினை நல்வினை யோடுட னாவரே. | 2.1.11
|