திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருவீழிமிழலை தேவாரத் திருப்பதிகம்

(முதல் திருமுறை 132வது திருப்பதிகம்)

1.132 திருவீழிமிழலை

பண் - மேகராகக்குறிஞ்சி

1416

ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங் கீரிருவர்க் கிரங்கிநின்று
நேரியநான் மறைப்பொருளை யுரைத்தொளிசேர் நெறியளித்தோன் நின்றகோயில்
பாரிசையும் பண்டிதர்கள் பன்னா஡ளும் பயின்றோது மோசைகேட்டு
வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள் பொருள்சொல்லும் மிழலையாமே.

1.132.1
1417

பொறியரவ மதுசுற்றிப் பொருப்பேமத் தாகப்புத் தேளிர்கூடி
மறிகடலைக் கடைந்திட்ட விடமுண்ட கண்டத்தோன் மன்னுங்கோயில்
செறியிதழ்த்தா மரைத்தவிசிற் றிகழ்ந்தோங்கு மிலைக்குடைக்கீழ்ச் செய்யார்செந்நெல்
வெறிகதிர்ச்சா மரையிரட்ட இளவன்னம் வீற்றிருக்கும் மிழலையாமே.

1.132.2
1418

எழுந்துலகை நலிந்துழலும் அவுணர்கள்தம் புரமூன்றும் எழிற்கண்நாடி
உழந்துருளும் அளவையினொள் ளெரிகொளவெஞ் சிலைவளைத்தோன் உறையுங்கோயில்
கொழுந்தரளம் நகைகாட்டக் கோகநதம் முகங்காட்டக் குதித்துநீர்மேல்
விழுந்தகயல் விழிகாட்ட விற்பவளம் வாய்காட்டும் மிழலையாமே.

1.132.3
1419

உரைசேரும் எண்பத்து நான்குநூ றாயிரமாம் யோனிபேதம்
நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய் அங்கங்கே நின்றான்கோயில்
வரைசேரும் முகில்முழவ மயில்கள்பல நடமாட வண்டுபாட
விரைசேர்பொன் னிதழிதர மென்காந்தள் கையேற்கும் மிழலையாமே.

1.132.4
1420

காணுமா றரியபெரு மானாகிக் காலமாய்க் குணங்கள்மூன்றாய்ப்
பேணுமூன் றுருவாகிப் பேருலகம் படைத்தளிக்கும் பெருமான்கோயில்
தாணுவாய் நின்றபர தத்துவனை உத்தமனை இறைஞ்சீரென்று
வேணுவார் கொடிவிண்ணோர் தமைவிளிப்ப போலோங்கு மிழலையாமே.

1.132.5
1421

அகனமர்ந்த அன்பினராய் அறுபகைசெற் றைம்புலனும் அடக்கிஞானப்
புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத் துள்ளிருக்கும் புராணர்கோயில்
தகவுடைநீர் மணித்தலத்துச் சங்குளவர்க் கந்திகழச் சலசத்தீயுள்
மிகவுடைய புன்குமலர்ப் பொரியட்ட மணஞ்செய்யும் மிழலையாமே.

1.132.6
1422

ஆறாடு சடைமுடியன் அனலாடு மலர்க்கையன் இமயப்பாவை
கூறாடு திருவுருவன் கூத்தாடுங் குணமுடையோன் குளிருங்கோயில்
சேறாடு செங்கழுநீர்த் தாதாடி மதுவுண்டு சிவந்தவண்டு
வேறாய உருவாகிச் செவ்வழிநற் பண்பாடும் மிழலையாமே.

1.132.7
1423

கருப்பமிகும் உடலடர்த்துக் காலூன்றிக் கைமறித்துக் கயிலையென்னும்
பொருப்பெடுக்க லுறுமரக்கன் பொன்முடிதோள் நெரித்தவிரற் புனிதர்கோயில்
தருப்பமிகு சலந்தரன்றன் உடல்தடிந்த சக்கரத்தை வேண்டியீண்டு
விருப்பொடுமால் வழிபாடு செய்யவிழி விமானஞ்சேர் மிழலையாமே.

1.132.8
1424

செந்தளிர்மா மலரோனுந் திருமாலும் ஏனமொடு அன்னமாகி
அந்தமடி காணாதே அவரேத்த வெளிப்பட்டோ ன் அமருங்கோயில்
புந்தியினான் மறைவழியே புற்பரப்பி நெய்சமிதை கையிற்கொண்டு
வெந்தழலின் வேட்டுலகின் மிகவளிப்போர் சேருமூர் மிழலையாமே.

1.132.9
1425

எண்ணிறந்த அமணர்களும் இழிதொழில்சேர் சாக்கியரும் என்றுந்தன்னை
நண்ணரிய வகைமயக்கித் தன்னடியார்க் கருள்புரியும் நாதன்கோயில்
பண்ணமரும் மென்மொழியார் பாலகரைப் பாராட்டும் ஓசைகேட்டு
விண்ணவர்கள் வியப்பெய்தி விமானத்தோ டும்மிழியும் மிழலையாமே.

1.132.10
1426

மின்னியலும் மணிமாடம் மிடைவீழி மிழலையான் விரையார்பாதஞ்
சென்னிமிசைக் கொண்டொழுகுஞ் சிரபுரக்கோன் செழுமறைகள் பயிலும்நாவன்
பன்னியசீர் மிகுஞான சம்பந்தன் பரிந்துரைத்த பத்துமேத்தி
இன்னிசையாற் பாடவல்லார் இருநிலத்தில் ஈசனெனும் இயல்பினோரே.

1.132.11

திருச்சிற்றம்பலம்

Back to Complete First thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page