திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(முதல் திருமுறை)

1.131 திருமுதுகுன்றம்


பண் - மேகராகக்குறிஞ்சி

1405

மெய்த்தாறு சுவையும் ஏழிசையும் எண்குணங்களும் விரும்பும்நால்வே
தத்தாலும் அறிவொண்ணா நடைதெளியப் பளிங்கேபோல் அரிவைபாகம்
ஒத்தாறு சமயங்கட் கொருதலைவன் கருதுமூர் உலவுதெண்ணீர்
முத்தாறு வெதிருதிர நித்திலம்வா ரிக்கொழிக்கும் முதுகுன்றமே.

1.131.1
1406

வேரிமிகு குழலியொடு வேடுவனாய் வெங்கானில் விசயன்மேவு
போரின்மிகு பொறையளந்து பாசுபதம் புரிந்தளித்த புராணர்கோயில்
காரின்மலி கடிபொழில்கள் கனிகள்பல மலருதிர்த்துக் கயமுயங்கி
மூரிவளம் கிளர்தென்றல் திருமுன்றிற் புகுந்துலவு முதுகுன்றமே.

1.131.2
1407

தக்கனது பெருவேள்வி சந்திரனிந் திரனெச்சன் அருக்கன்அங்கி
மிக்கவிதா தாவினொடும் விதிவழியே தண்டித்த விமலர்கோயில்
கொக்கினிய கொழும்வருக்கைக் கதலிகமு குயர்தெங்கின் குவைகொள்சோலை
முக்கனியின் சாறொழுகிச் சேறுலரா நீள்வயல்சூழ் முதுகுன்றமே.

1.131.3
1408

வெம்மைமிகு புரவாணர் மிகைசெய்ய விறலழிந்து விண்ணுளோர்கள்
செம்மலரோன் இந்திரன்மால் சென்றிரப்பத் தேவர்களே தேரதாக
மைம்மருவு மேருவிலு மாசுணநாண் அரியெரிகால் வாளியாக
மும்மதிலும் நொடியளவிற் பொடிசெய்த முதல்வனிடம் முதுகுன்றமே.

1.131.4
1409

இழைமேவு கலையல்குல் ஏந்திழையாள் ஒருபாலா யொருபாலெள்கா
துழைமேவும் உரியுடுத்த ஒருவனிருப் பிடமென்பர் உம்பரோங்கு
கழைமேவு மடமந்தி மழைகண்டு மகவினொடும் புகவொண்கல்லின்
முழைமேவு மால்யானை இரைதேரும் வளர்சாரல் முதுகுன்றமே.

1.131.5
1410

நகையார்வெண் டலைமாலை முடிக்கணிந்த நாதனிடம் நன்முத்தாறு
வகையாரும் வரைப்பண்டங் கொண்டிரண்டு கரையருகு மறியமோதி
தகையாரும் வரம்பிடறிச் சாலிகழு நீர்குவளை சாயப்பாய்ந்து
முகையார்செந் தாமரைகள் முகம்மலர வயல்தழுவு முதுகுன்றமே.

1.131.6
1411

அறங்கிளரும் நால்வேத மாலின்கீழ் இருந்தருளி யமரர்வேண்ட
நிறங்கிளர்செந் தாமரையோன் சிரமைந்தின் ஒன்றறுத்த நிமலர்கோயில்
திறங்கொள்மணித் தரளங்கள் வரத்திரண்டங் கெழிற்குறவர் சிறுமிமார்கள்
முறங்களினாற் கொழித்துமணி செலவிலக்கி முத்துலைப்பெய் முதுகுன்றமே.

1.131.7
1412

கதிரொளிய நெடுமுடிபத் துடையகடல் இலங்கையர்கோன் கண்ணும்வாயும்
பிதிரொளிய கனல்பிறங்கப் பெருங்கயிலை மலையைநிலை பெயர்த்தஞான்று
மதிலளகைக் கிறைமுரல மலரடியொன் றூன்றிமறை பாடவாங்கே
முதிரொளிய சுடர்நெடுவாள் முன்னீந்தான் வாய்ந்தபதி முதுகுன்றமே.

1.131.8
1413

பூவார்பொற் றவிசின்மிசை யிருந்தவனும் பூந்துழாய் புனைந்தமாலும்
ஓவாது கழுகேன மாயுயர்ந்தாழ்ந் துறநாடி யுண்மைகாணாத்
தேவாருந் திருவுருவன் சேருமலை செழுநிலத்தை மூடவந்த
மூவாத முழங்கொலிநீர் கீழ்தாழ மேலுயர்ந்த முதுகுன்றமே.

1.131.9
1414

மேனியில்சீ வரத்தாரும் விரிதருதட் டுடையாரும் விரவலாகா
ஊனிகளா யுள்ளார்சொற் கொள்ளாதும் உள்ளுணர்ந்தங் குய்மின்தொண்டீர்
ஞானிகளா யுள்ளார்கள் நான்மறையை முழுதுணர்ந்தைம் புலன்கள்செற்று
மோனிகளாய் முனிச்செல்வர் தனித்திருந்து தவம்புரியும் முதுகுன்றமே.

1.131.10
1415

முழங்கொலிநீர் முத்தாறு வலஞ்செய்யும் முதுகுன்றத் திறையைமூவாப்
பழங்கிழமைப் பன்னிருபேர் படைத்துடைய கழுமலமே பதியாக்கொண்டு
தழங்கெரிமூன் றோம்புதொழில் தமிழ்ஞான சம்பந்தன் சமைத்தபாடல்
வழங்குமிசை கூடும்வகை பாடுமவர் நீடுலகம் ஆள்வர்தாமே.

1.131.11

திருச்சிற்றம்பலம்
Back to Complete First thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page