திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருவையாறு தேவாரத் திருப்பதிகம்

(முதல் திருமுறை 130வது திருப்பதிகம்)

இசைப் பயிற்சி:-

Get the Flash Player to see this player.

1.130 திருவையாறு

பண் - மேகராகக்குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

1394

புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட் டைம்மேலுந்தி
அலமந்த போதாக அஞ்சேலென் றருள்செய்வான் அமருங்கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென்றஞ்சிச்
சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவையாறே.

1.130.1
1395

விடலேறு படநாகம் அரைக்கசைத்து வெற்பரையன் பாவையோடும்
அடலேறொன் றதுவேறி அஞ்சொலீர் பலியென்னு மடிகள்கோயில்
கடலேறித் திரைமோதிக் காவிரியி னுடன்வந்து கங்குல்வைகித்
திடலேறிச் சுரிசங்கஞ் செழுமுத்தங் கீன்றலைக்குந் திருவையாறே.

1.130.2
1396

கங்காளர் கயிலாய மலையாளர் கானப்பே ராளர்மங்கை
பங்காளர் திரிசூலப் படையாளர் விடையாளர் பயிலுங்கோயில்
கொங்காளப் பொழில்நுழைந்து கூர்வாயால் இறகுலர்த்திக் கூதல்நீங்கி
செங்கால்நன் வெண்குருகு பைங்கானல் இரைதேருந் திருவையாறே.

1.130.3
1397

ஊன்பாயு முடைதலைக்கொண் டூரூரின் பலிக்குழல்வார் உமையாள்பங்கர்
தான்பாயும் விடையேறுஞ் சங்கரனார் தழலுருவர் தங்குங்கோயில்
மான்பாய வயலருகே மரமேறி மந்திபாய் மடுக்கள்தோறுந்
தேன்பாய மீன்பாய செழுங்கமல மொட்டலருந் திருவையாறே.

1.130.4
1398

நீரோடு கூவிளமும் நிலாமதியும் வெள்ளெருக்கும் நிறைந்தகொன்றைத்
தாரோடு தண்கரந்தைச் சடைக்கணிந்த தத்துவனார் தங்குங்கோயில்
காரோடி விசும்பளந்து கடிநாறும் பொழிலணைந்த கமழ்தார்வீதித்
தேரோடும் அரங்கேறிச் சேயிழையார் நடம்பயிலுந் திருவையாறே.

1.130.5
1399

வேந்தாகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறிகாட்டும் விகிர்தனாகிப்
பூந்தாம நறுங்கொன்றை சடைக்கணிந்த புண்ணியனார் நண்ணுங்கோயில்
காந்தார மிசையமைத்துக் காரிகையார் பண்பாடக் கவினார்வீதித்
தேந்தாமென் றரங்கேறிச் சேயிழையார் நடமாடுந் திருவையாறே.

1.130.6
1400

நின்றுலா நெடுவிசும்பில் நெருக்கிவரு புரமூன்றும் நீள்வாயம்பு
சென்றுலாம் படிதொட்ட சிலையாளி மலையாளி சேருங்கோயில்
குன்றெலாங் குயில்கூவக் கொழும்பிரச மலர்பாய்ந்து வாசமல்கு
தென்றலா ரடிவருடச் செழுங்கரும்பு கண்வளருந் திருவையாறே.

1.130.7
1401

அஞ்சாதே கயிலாய மலையெடுத்த அரக்கர்கோன் தலைகள்பத்தும்
மஞ்சாடு தோள்நெரிய அடர்த்தவனுக் கருள்புரிந்த மைந்தர்கோயில்
இஞ்சாயல் இளந்தெங்கின் பழம்வீழ இளமேதி இரிந்தங்கோடிச்
செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல வயல்படியுந் திருவையாறே.

1.130.8
1402

மேலோடி விசும்பணவி வியன்நிலத்தை மிகவகழ்ந்து மிக்குநாடும்
மாலோடு நான்முகனு மறியாத வகைநின்றான் மன்னுங்கோயில்
கோலோடக் கோல்வளையார் கூத்தாடக் குவிமுலையார் முகத்தினின்று
சேலோடச் சிலையாடச் சேயிழையார் நடமாடுந் திருவையாறே.

1.130.9
1403

குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு சாக்கியருங் குணமொன்றில்லா
மிண்டாடு மிண்டருரை கேளாதே யாளாமின் மேவித்தொண்டீர்
எண்டோ ளர் முக்கண்ணர் எம்மீசர் இறைவரினி தமருங்கோயில்
செண்டாடு புனல்பொன்னிச் செழுமணிகள் வந்தலைக்குந் திருவையாறே.

1.130.10
1404

அன்னமலி பொழில்புடைசூழ் ஐயாற்றெம் பெருமானை அந்தண்காழி
மன்னியசீர் மறைநாவன் வளர்ஞான சம்பந்தன் மருவுபாடல்
இன்னிசையா லிவைபத்தும் இசையுங்கால் ஈசனடி யேத்துவார்கள்
தன்னிசையோ டமருலகில் தவநெறிசென் றெய்துவார் தாழாதன்றே.

1.130.11

திருச்சிற்றம்பலம்

Back to Complete First thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page