|
1315 |
விரிதரு புலியுரி விரவிய அரையினர்
திரிதரும் எயிலவை புனைகணை யினிலெய்த
எரிதரு சடையினர் இடைமரு தடைவுனல்
புரிதரு மன்னவர் புகழ்மிக வுளதே. | 1.122.1 |
1316 |
மறிதிரை படுகடல் விடமடை மிடறினர்
எறிதிரை கரைபொரும் இடைமரு தெனுமவர்
செறிதிரை நரையொடு செலவிலர் உலகினில்
பிறிதிரை பெறுமுடல் பெருகுவ தரிதே. | 1.122.2
| 1317 |
சலசல சொரிபுனல் சடையினர் மலைமகள்
நிலவிய உடலினர் நிறைமறை மொழியினர்
இலரென இடுபலி யவரிடை மருதினை
வலமிட வுடல்நலி விலதுள வினையே. | 1.122.3
| 1318 |
விடையினர் வெளியதொர் தலைகல னெனநனி
கடைகடை தொறுபலி யிடுகென முடுகுவர்
இடைவிட லரியவர் இடைமரு தெனும்நகர்
உடையவர் அடியிணை தொழுவதெம் உயர்வே. | 1.122.4
| 1319 |
உரையரும் உருவினர் உணர்வரு வகையினர்
அரைபொரு புலியதள் உடையினர் அதன்மிசை
இரைமரும் அரவினர் இடைமரு தெனவுளம்
உரைகள துடையவர் புகழ்மிக வுளதே. | 1.122.5
| 1320 |
ஒழுகிய புனல்மதி யரவமொ டுறைதரும்
அழகிய முடியுடை அடிகள தறைகழல்
எழிலினர் உறையிடை மருதினை மலர்கொடு
தொழுதல்செய் தெழுமவர் துயருறல் இலரே. | 1.122.6
| 1321 |
கலைமலி விரலினர் கடியதொர் மழுவொடும்
நிலையினர் சலமகள் உலவிய சடையினர்
மலைமகள் முலையிணை மருவிய வடிவினர்
இலைமலி படையவர் இடமிடை மருதே. | 1.122.7
| 1322 |
செருவடை யிலவல செயல்செயத் திறலொடும்
அருவரை யினிலொரு பதுமுடி நெரிதர
இருவகை விரனிறி யவரிடைமருதது
பரவுவர் அருவினை ஒருவுதல் பெரிதே. | 1.122.8
| 1323 |
அரியொடு மலரவன் எனவிவ ரடிமுடி
தெரிவகை அரியவர் திருவடி தொழுதெழ
எரிதரும் உருவர்தம் இடைமரு தடைவுறல்
புரிதரும் மன்னவர் புகழ்மிக உளதே. | 1.122.9
| 1324 |
குடைமயி லினதழை மருவிய வுருவினர்
உடைமரு துவரினர் பலசொல வுறவிலை
அடைமரு திருவினர் தொழுதெழு கழலவர்
இடைமரு தெனமனம் நினைவதும் எழிலே. | 1.122.10
| 1325 |
பொருகடல் அடைதரு புகலியர் தமிழொடு
விரகினன் விரிதரு பொழிலிடைமருதினைப்
பரவிய ஒருபது பயிலவல் லவரிடர்
விரவிலர் வினையொடு வியனுல குறவே. | 1.122.11
|