திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(முதல் திருமுறை)

1.117 திருப்பிரமபுரம் - மொழிமாற்று


பண் - வியாழக்குறிஞ்சி

1259

காட தணிகலங் காரர வம்பதி காலதனிற்
தோட தணிகுவர் சுந்தரக் காதினில் தூச்சிலம்பர்
வேட தணிவர் விசயற் குருவம்வில் லுங்கொடுப்பர்
பீட தணிமணி மாடப் பிரம புரத்தாரே.

1.117.1
1260

கற்றைச் சடையது கங்கணம் முன்கையில் திங்கள்கங்கை
பற்றித்து முப்புரம் பார்படைத் தோன்றலை சுட்டதுபண்
டெற்றித்துப் பாம்பை யணிந்தது கூற்றை யெழில்விளங்கும்
வெற்றிச் சிலைமதில் வேணு புரத்தெங்கள் வேதியரே.

1.117.2
1261

கூவிளங் கையது பேரி சடைமுடிக் கூட்டத்தது
தூவிளங் கும்பொடி பூண்டது பூசிற்று துத்திநாகம்
ஏவிளங் குந்நுத லாளையும் பாகம் உரித்தனரின்
பூவிளஞ் சோலைப் புகலியுள் மேவிய புண்ணியரே.

1.117.3
1262

உரித்தது பாம்பை யுடல்மிசை இட்டதோர் ஒண்களிற்றை
எரித்ததொ ராமையை இன்புறப் பூண்டது முப்புரத்தைச்
செருத்தது சூலத்தை ஏந்திற்று தக்கனை வேள்விபன்னூல்
விரித்தவர் வாழ்தரு வேங்குரு வில்வீற் றிருந்தவரே.

1.117.4
1263

கொட்டுவர் அக்கரை யார்ப்பது தக்கை குறுந்தாளன
விட்டுவர் பூதங் கலப்பில ரின்புக ழென்புலவின்
மட்டுவ ருந்தழல் சூடுவர் மத்தமும் ஏந்துவர்வான்
தொட்டுவ ருங்கொடித் தோணி புரத்துறை சுந்தரரே.

1.117.5
1264

சாத்துவர் பாசந் தடக்கையி லேந்துவர் கோவணந்தங்
கூத்தவர் கச்சுக் குலவிநின் றாடுவர் கொக்கிறகும்
பேர்த்தவர் பல்படை பேயவை சூடுவர் பேரெழிலார்
பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவிய புண்ணியரே.

1.117.6
1265

காலது கங்கை கற்றைச்சடை யுள்ளாற் கழல்சிலம்பு
மாலது ஏந்தல் மழுவது பாகம் வளர்கொழுங்கோட்
டாலது ஊர்வர் அடலேற் றிருப்பர் அணிமணிநீர்ச்
சேலது கண்ணியொர் பங்கர் சிரபுரம் மேயவரே.

1.117.7
1266

நெருப்புரு வெள்விடை மேனியர் ஏறுவர் நெற்றியின்கண்
மருப்புரு வன்கண்ணர் தாதையைக் காட்டுவர் மாமுருகன்
விருப்புறு பாம்புக்கு மெய்த்தந்தை யார்விறல் மாதவர்வாழ்
பொருப்புறு மாளிகைத் தென்புற வத்தணி புண்ணியரே.

1.117.8
1267

இலங்கைத் தலைவனை யேந்திற் றிறுத்த திரலை யின்னாள்
கலங்கிய கூற்றுயிர் பெற்றது மாணி குமைபெற்றது
கலங்கிளர் மொந்தையின் ஆடுவர் கொட்டுவர் காட்டகத்துச்
சலங்கிளர் வாழ்வயல் சண்பையுள் மேவிய தத்துவரே.

1.117.9
1268

அடியிணை கண்டிலன் தாமரை யோன்மால் முடிகண்டிலன்
கொடியணி யும்புலி யேறுகந் தேறுவர் தோலுடுப்பர்
பிடியணி யுந்நடை யாள்வெற் பிருப்பதோர் கூறுடையர்
கடியணி யும்பொழிற் காழியுள் மேய கறைக்கண்டரே.

1.117.10
1269

கையது வெண்குழை காதது சூலம் அமணர்புத்தர்
எய்துவர் தம்மை அடியவர் எய்தாரோர் ஏனக்கொம்பு
மெய்திகழ் கோவணம் பூண்ப துடுப்பது மேதகைய
கொய்தலர் பூம்பொழில் கொச்சையுள் மேவிய கொற்றவரே.

1.117.11
1270

கல்லுயர் கழுமல விஞ்சியுள் மேவிய கடவுள்தன்னை
நல்லுரை ஞானசம் பந்தன்ஞா னத்தமிழ் நன்குணரச்
சொல்லிடல் கேட்டல் வல்லோர் தொல்லைவானவர் தங்களொடுஞ்
செல்குவர் சீரரு ளாற்பெற லாம்சிவ லோகமதே.

1.117.12

திருச்சிற்றம்பலம்
Back to Complete First thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page