திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(முதல் திருமுறை)

1.104 திருப்புகலி


பண் - வியாழக்குறிஞ்சி


திருச்சிற்றம்பலம்
Back to Complete First thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page

1122

ஆடல் அரவசைத்தான் அருமாமறை தான்விரித்தான் கொன்றை
சூடிய செஞ்சடையான் சுடுகாடமர்ந்த பிரான்
ஏடவிழ் மாமலையாள் ஒருபாகம் அமர்ந்தடியார் ஏத்த
ஆடிய எம்மிறையூர் புகலிப் பதியாமே.

1.104.1
1123

ஏல மலிகுழலார் இசைபாடி எழுந்தருளாற் சென்று
சோலை மலிசுனையிற் குடைந்தாடித் துதிசெய்ய
ஆலை மலிபுகைபோய் அண்டர்வானத்தை மூடிநின்று நல்ல
மாலை யதுசெய்யும் புகலிப் பதியாமே.

1.104.2
1124

ஆறணி செஞ்சடையான் அழகார்புரம் மூன்றுமன்று வேவ
நீறணி யாகவைத்த நிமிர்புன்சடை எம்மிறைவன்
பாறணி வெண்டலையிற் பகலேபலி என்றுவந்து நின்ற
வேறணி கோலத்தினான் விரும்பும் புகலியதே.

1.104.3
1125

வெள்ள மதுசடைமேற் கரந்தான் விரவார்புரங்கள் மூன்றுங்
கொள்ள எரிமடுத்தான் குறைவின்றி யுறைகோயில்
அள்ளல் விளைகழனி அழகார்விரைத் தாமரைமேல் அன்னப்
புள்ளினம் வைகியெழும் புகலிப் பதிதானே.

1.104.4
1126

சூடும் மதிச்சடைமேல் சுரும்பார்மலர்க் கொன்றைதுன்ற நட்டம்
ஆடும் அமரர்பிரான் அழகார்உமை யோடுமுடன்
வேடு படநடந்த விகிர்தன் குணம்பரவித் தொண்டர்
பாட இனிதுறையும் புகலிப் பதியாமே.

1.104.5
1127

மைந்தணி சோலையின்வாய் மதுப்பாய்வரி வண்டினங்கள் வந்து
நந்திசை பாடநடம் பயில்கின்ற நம்பனிடம்
அந்திசெய் மந்திரத்தால் அடியார்கள் பரவியெழ விரும்பும்
புந்திசெய் நால்மறையோர் புகலிப் பதிதானே.

1.104.6
1128

மங்கையோர் கூறுகந்த மழுவாளன் வார்சடைமேல் திங்கள்
கங்கைதனைக் கரந்த கறைக்கண்டன் கருதுமிடஞ்
செங்கயல் வார்கழனி திகழும் புகலிதனைச் சென்றுதம்
அங்கையி னால்தொழுவார் அவலம் அறியாரே.

1.104.7
1129

வல்லிய நுண்ணிடையாள் உமையாள் விருப்பனவன் நண்ணும்
நல்லிட மென்றறியான் நலியும் விறலரக்கன்
பல்லொடு தோள்நெரிய விரலூன்றிப் பாடலுமே கைவாள்
ஒல்லை அருள்புரிந்தான் உறையும் புகலியதே.

1.104.8
1130

தாதலர் தாமரைமேல் அயனுந் திருமாலுந் தேடி
ஓதியுங் காண்பரிய உமைகோன் உறையுமிடம்
மாதவி வான்வகுளம் மலர்ந்தெங்கும் விரைதோய வாய்ந்த
போதலர் சோலைகள்சூழ் புகலிப் பதிதானே.

1.104.9
1131

வெந்துவர் மேனியினார் விரிகோவ ணநீத்தார் சொல்லும்
அந்தர ஞானமெல்லாம் அவையோர் பொருளென்னேல்
வந்தெதி ரும்புரமூன் றெரித்தான் உறைகோயில் வாய்ந்த
புந்தியினார் பயிலும் புகலிப் பதிதானே.

1.104.10
1132

வேதமோர் கீதமுணர் வாணர்தொழு தேத்தமிகு வாசப்
போதனைப் போல்மறையோர் பயிலும் புகலிதன்னுள்
நாதனை ஞானமிகு சம்பந்தன் தமிழ்மாலை நாவில்
ஓதவல் லாருலகில் உறுநோய் களைவாரே.

1.104.11