|
1091 |
தண்ணார்திங்கட் பொங்கரவந்தாழ் புனல்சூடிப்
பெண்ணாணாய பேரருளாளன் பிரியாத
கண்ணார்கோயில் கைதொழுவோர்கட் கிடர்பாவம்
நண்ணாவாகும் நல்வினையாய நணுகும்மே. | 1.101.1 |
1092 |
கந்தமர்சந்துங் காரகிலுந்தண் கதிர்முத்தும்
வந்தமர்தெண்ணீர் மண்ணிவளஞ்சேர் வயல்மண்டிக்
கொந்தலர்சோலைக் கோகிலமாடக் குளிர்வண்டு
செந்திசைபாடுஞ் சீர்திகழ்கண்ணார் கோயிலே. | 1.101.2
| 1093 |
பல்லியல்பாணிப் பாரிடமேத்தப் படுகானின்
எல்லிநடஞ்செய் யீசனெம்மான்றன் இடமென்பர்
கொல்லையின்முல்லை மல்லிகைமௌவற் கொடிபின்னிக்
கல்லியல்இஞ்சி மஞ்சமர்கண்ணார் கோயிலே. | 1.101.3
| 1094 |
தருவளர்கானந் தங்கியதுங்கப் பெருவேழம்
மருவளர்கோதை அஞ்சவுரித்து மறைநால்வர்க்
குருவற்ஆல நீழலமர்ந்தீங் குரைசெய்தார்
கருவளர்கண்ணார் கோயிலடைந்தோர் கற்றோரே. | 1.101.4
| 1095 |
மறுமாணுருவாய் மற்றிணையின்றி வானோரைச்
செறுமாவலிபால் சென்றுலகெல்லாம் அளவிட்ட
குறுமாணுருவன் தற்குறியாகக் கொண்டாடும்
கறுமாகண்டன் மேயதுகண்ணார் கோயிலே. | 1.101.5
| 1096 |
விண்ணவருக்காய் வேலையுள்நஞ்சம் விருப்பாக
உண்ணவனைத்தே வர்க்கமுதீந்தெவ் வுலகிற்கும்
கண்ணவனைக்கண் ணார்திகழ்கோயிற் கனிதன்னை
நண்ணவல்லோர்கட் கில்லைநமன்பால் நடலையே. | 1.101.6
| 1097 |
முன்னொருகாலத் திந்திரனுற்ற முனிசாபம்
பின்னொருநாளவ் விண்ணவரேத்தப் பெயர்வெய்தித்
தன்னருளாற்கண் ணாயிரமீந்தோன் சார்பென்பர்
கன்னியர்நாளுந் துன்னமர்கண்ணார் கோயிலே. | 1.101.7
| 1098 |
பெருக்கெண்ணாத பேதையரக்கன் வரைக்கீழால்
நெருக்குண்ணாத்தன் நீள்கழல்நெஞ்சில் நினைந்தேத்த
முருக்குண்ணாதோர் மொய்கதிர்வாள்தேர் முன்னீந்த
திருக்கண்ணாரென் பார்சிவலோகஞ் சேர்வாரே. | 1.101.8
| 1099 |
செங்கமலப்போ திற்திகழ்செல்வன் திருமாலும்
அங்கமலக்கண் நோக்கரும்வண்ணத் தழலானான்
தங்கமலக்கண் ணார்திகழ்கோயில் தமதுள்ளத்
தங்கமலத்தோ டேத்திடஅண்டத் தமர்வாரே. | 1.101.9
| 1100 |
தாறிடுபெண்ணைத் தட்டுடையாருந் தாமுண்ணுஞ்
சோறுடையார்சொல் தேறன்மின்வெண்ணூல் சேர்மார்பன்
ஏறுடையன்பரன் என்பணிவான்நீள் சடைமேலோர்
ஆறுடையண்ணல் சேர்வதுகண்ணார் கோயிலே. | 1.101.10
| 1101 |
காமருகண்ணார் கோயிலுளானைக் கடல்சூழ்ந்த
பூமருசோலைப் பொன்னியல்மாடப் புகலிக்கோன்
நாமருதொன்மைத் தன்மையுள்ஞான சம்பந்தன்
பாமருபாடல் பத்தும்வல்லார்மேல் பழிபோமே. | 1.101.11
|