திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருமுதுகுன்ற தேவாரத் திருப்பதிகம்

(முதல் திருமுறை 93வது திருப்பதிகம்
திருவிருக்குக்குறள்)

1.93 திருமுதுகுன்றம் - திருவிருக்குக்குறள்

பண் - குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

 
நின்று மலர்தூவி, இன்று முதுகுன்றை	
நன்றும் ஏத்துவீர்க், கென்றும் இன்பமே.	1.93.1
	
அத்தன் முதுகுன்றைப், பத்தி யாகிநீர்	
நித்தம் ஏத்துவீர்க், குய்த்தல் செல்வமே.	1.93.2
	
ஐயன் முதுகுன்றைப், பொய்கள் கெடநின்று	
கைகள் கூப்புவீர், வையம் உமதாமே.	1.93.3
	
ஈசன் முதுகுன்றை, நேச மாகிநீர்	
வாச மலர்தூவப், பாச வினைபோமே.	1.93.4
	
மணியார் முதுகுன்றைப், பணிவா ரவர்கண்டீர்	
பிணியா யினகெட்டுத், தணிவா ருலகிலே.	1.93.5
	
மொய்யார் முதுகுன்றில், ஐயா வெனவல்லார்	
பொய்யா ரிரவோர்க்குச், செய்யாள் அணியாளே.	1.93.6
	
விடையான் முதுகுன்றை, இடையா தேத்துவார்	
படையா யினசூழ, உடையா ருலகமே.	1.93.7
	
பத்துத் தலையோனைக், கத்த விரலூன்றும்	
அத்தன் முதுகுன்றை, மொய்த்துப் பணிமினே.	1.93.8
	
இருவ ரறியாத, ஒருவன் முதுகுன்றை	
உருகி நினைவார்கள், பெருகி நிகழ்வோரே.	1.93.9
	
தேரர் அமணரும், சேரும் வகையில்லான்	
நேரின் முதுகுன்றை, நீர்நின் றுள்குமே.	1.93.10
	
நின்று முதுகுன்றை, நன்று சம்பந்தன்	
ஒன்றும் உரைவல்லார், என்றும் உயர்வோரே.	1.93.11

		- திருச்சிற்றம்பலம் - 

Back to Complete First thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page