திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருவாரூர் தேவாரத் திருப்பதிகம்

(முதல் திருமுறை 91வது திருப்பதிகம்
திருவிருக்குக்குறள்)

1.91 திருஆரூர் - திருவிருக்குக்குறள்

பண் - குறிஞ்சி

981

சித்தம் தெளிவீர்காள், அத்தன் ஆரூரைப்
பத்தி மலர்தூவ, முத்தி யாகுமே.

1.91.1
982

பிறவி யறுப்பீர்காள், அறவன் ஆரூரை
மறவா தேத்துமின், துறவி யாகுமே.

1.91.2
983

துன்பந் துடைப்பீர்காள், அன்பன் அணியாரூர்
நன்பொன் மலர்தூவ, இன்ப மாகுமே.

1.91.3
984

உய்ய லுறுவீர்காள், ஐயன் ஆரூரைக்
கையி னாற்றொழ, நையும் வினைதானே.

1.91.4
985

பிண்டம் அறுப்பீர்காள், அண்டன் ஆரூரைக்
கண்டு மலர்தூவ, விண்டு வினைபோமே.

1.915
986

பாசம் அறுப்பீர்காள், ஈசன் அணியாரூர்
வாச மலர்தூவ, நேச மாகுமே.

1.91.6
987

வெய்ய வினைதீர, ஐயன் அணியாரூர்
செய்ய மலர்தூவ, வைய முமதாமே.

1.91.7
988

அரக்கன் ஆண்மையை, நெருக்கி னானாரூர்
கரத்தி னாற்றொழத், திருத்த மாகுமே.

1.91.8
989

துள்ளும் இருவர்க்கும், வள்ளல் ஆரூரை
உள்ளு மவர்தம்மேல், விள்ளும் வினைதானே.

1.91.9
990

கடுக்கொள் சீவரை, அடக்கி னானாரூர்
எடுத்து வாழ்த்துவார், விடுப்பர் வேட்கையே.

1.91.10
991

சீரூர் சம்பந்தன், ஆரூரைச் சொன்ன
பாரூர் பாடலார், பேரா ரின்பமே.

1.91.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வன்மீகநாதர், தேவியார் - அல்லியங்கோதையம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete First thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page