திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருப்பிரமபுர தேவாரத் திருப்பதிகம்

(முதல் திருமுறை 90வது திருப்பதிகம்
திருவிருக்குக்குறள்)

1.90 திருப்பிரமபுரம் - திருவிருக்குக்குறள்

பண் - குறிஞ்சி

அரனை உள்குவீர், பிரம னூருளெம்	
பரனை யேமனம், பரவி உய்ம்மினே.	1.90.1
	
காண உள்குவீர், வேணு நற்புரத்	
தாணு வின்கழல், பேணி உய்ம்மினே.	1.90.2
	
நாதன் என்பிர்காள், காதல் ஒண்புகல்	
ஆதி பாதமே, ஓதி உய்ம்மினே.	1.90.3
	
அங்கம் மாதுசேர், பங்கம் ஆயவன்	
வெங்குரு மன்னும், எங்க ளீசனே.	1.90.4
	
வாணி லாச்சடைத், தோணி வண்புரத்	
தாணி நற்பொனைக், காணு மின்களே.	1.90.5
	
பாந்த ளார்சடைப், பூந்த ராய்மன்னும்	
ஏந்து கொங்கையாள், வேந்த னென்பரே.	1.90.6
	
கரிய கண்டனைச், சிரபு ரத்துளெம்	
அரசை நாடொறும், பரவி உய்ம்மினே.	1.90.7
	
நறவம் ஆர்பொழிற், புறவ நற்பதி	
இறைவன் நாமமே, மறவல் நெஞ்சமே.	1.90.8
	
தென்றில் அரக்கனைக், குன்றிற் சண்பைமன்	
அன்று நெரித்தவா, நின்றுநினைமினே.	1.90.9
	
அயனும் மாலுமாய், முயலுங் காழியான்	
பெயல்வை யெய்திநின், றியலும் உள்ளமே.	1.90.10
	
தேரர் அமணரைச், சேர்வில் கொச்சைமன்	
நேரில் கழல்நினைந், தோரும் உள்ளமே.	1.90.11
	
தொழும னத்தவர், கழும லத்துறை	
பழுதில் சம்பந்தன், மொழிகள் பத்துமே.	1.90.12

	        - திருச்சிற்றம்பலம் -
பிரம்மபுரமென்பது சீகாழி.


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page