|
893 |
அடையார் புரமூன்றும் அனல்வாய்விழ வெய்து
மடையார் புனலம்பர் மாகா ளம்மேய
விடையார் கொடியெந்தை வெள்ளைப் பிறைசூடுஞ்
சடையான் கழலேத்தச் சாரா வினைதானே. | 1.83.1 |
894 |
தேனார் மதமத்தந் திங்கள் புனல்சூடி
வானார் பொழிலம்பர் மாகா ளம்மேய
ஊனார் தலைதன்னிற் பலிகொண் டுழல்வாழ்க்கை
ஆனான் கழலேத்த அல்லல் அடையாவே. | 1.83.2
| 895 |
திரையார் புனலோடு செல்வ மதிசூடி
விரையார் பொழிலம்பர் மாகா ளம்மேய
நரையார் விடையூரும் நம்பான் கழல்நாளும்
உரையா தவர்கண்மேல் ஒழியா வூனம்மே. | 1.83.3
| 896 |
கொந்தண் பொழிற்சோலைக் கோல வரிவண்டு
மந்தம் மலியம்பர் மாகா ளம்மேய
கந்தங் கமழ்கொன்றை கமழ்புன் சடைவைத்த
எந்தை கழலேத்த இடர்வந் தடையாவே. | 1.83.4
| 897 |
அணியார் மலைமங்கை ஆகம் பாகமாய்
மணியார் புனலம்பர் மாகா ளம்மேய
துணியா ருடையினான் துதைபொற் கழல்நாளும்
பணியா தவர்தம்மேற் பறையா பாவம்மே. | 1.83.5
| 898 |
பண்டாழ் கடல்நஞ்சை உண்டு களிமாந்தி
வண்டார் பொழிலம்பர் மாகா ளம்மேய
விண்டார் புரம்வேவ மேருச் சிலையாகக்
கொண்டான் கழலேத்தக் குறுகா குற்றம்மே. | 1.83.6
| 899 |
மிளிரும் மரவோடு வெள்ளைப் பிறைசூடி
வளரும் பொழிலம்பர் மாகா ளம்மேய
கிளருஞ் சடையண்ணல் கேடில் கழலேத்தத்
தளரும் முறுநோய்கள் சாருந் தவந்தானே. | 1.83.7
| 900 |
கொலையார் மழுவோடு கோலச் சிலையேந்தி
மலையார் புனலம்பர் மாகா ளம்மேய
இலையார் திரிசூலப் படையான் கழல்நாளும்
நிலையா நினைவார்மேல் நில்லா வினைதானே. | 1.83.8
| 901 |
சிறையார் வரிவண்டு தேனுண் டிசைபாட
மறையார் நிறையம்பர் மாகா ளம்மேய
நறையார் மலரானும் மாலுங் காண்பொண்ணா
இறையான் கழலேத்த எய்தும் இன்பமே. | 1.83.9
| 902 |
மாசூர் வடிவின்னார் மண்டை யுணல்கொள்வார்
கூசா துரைக்குஞ்சொற் கொள்கை குணமல்ல
வாசார் பொழிலம்பர் மாகா ளம்மேய
ஈசா என்பார்கட் கில்லை யிடர்தானே. | 1.83.10
| 903 |
வெருநீர் கொளவோங்கும் வேணு புரந்தன்னுள்
திருமா மறைஞான சம்பந் தனசேணார்
பெருமான் மலியம்பர் மாகா ளம்பேணி
உருகா வுரைசெய்வார் உயர்வான் அடைவாரே. | 1.83.11
|