|
875 |
நல்லார் தீமேவுந் தொழிலார் நால்வேதஞ்
சொல்லார் கேண்மையார் சுடர்பொற் கழலேத்த
வில்லாற் புரஞ்செற்றான் மேவும் பதிபோலுங்
கல்லார் மதில்சூழ்ந்த காழிந் நகர்தானே. | 1.81.1 |
876 |
துளிவண் டேன்பாயும் இதழி தூமத்தந்
தெளிவெண் டிங்கள்மா சுணநீர் திகழ்சென்னி
ஒளிவெண் டலைமாலை உகந்தா னூர்போலுங்
களிவண்டியாழ் செய்யுங் காழிந் நகர்தானே. | 1.81.2
| 877 |
ஆலக் கோலத்தின் நஞ்சுண் டமுதத்தைச்
சாலத் தேவர்க்கீந் தளித்தான் தன்மையால்
பாலற் காய்நன்றும் பரிந்து பாதத்தால்
காலற் காய்ந்தானூர் காழிந் நகர்தானே. | 1.81.3
| |
(*) இப்பதிகத்தில் 4,5,6,7-ம்செய்யுட்கள் மறைந்துபோயின. | 1.81.4-7
| 878 |
இரவில் திரிவோர்கட் கிறைதோ ளிணைபத்தும்
நிரவிக் கரவாளை நேர்ந்தா னிடம்போலும்
பரவித் திரிவோர்க்கும் பால்நீ றணிவோர்க்குங்
கரவில் தடக்கையார் காழிந் நகர்தானே. | 1.81.8
| 879 |
மாலும் பிரமனும் அறியா மாட்சியான்
தோலும் புரிநூலுந் துதைந்த வரைமார்பன்
ஏலும் பதிபோலும் இரந்தோர்க் கெந்நாளுங்
காலம் பகராதார் காழிந் நகர்தானே. | 1.81.9
| 880 |
தங்கை யிடவுண்பார் தாழ்சீ வரத்தார்கள்
பெங்கை யுணராதே பேணித் தொழுமின்கள்
மங்கை யொருபாகம் மகிழ்ந்தான் மலர்ச்சென்னிக்
கங்கை தரித்தானூர் காழிந் நகர்தானே. | 1.81.10
| 881 |
வாசங் கமழ்காழி மதிசெஞ் சடைவைத்த
ஈசன் நகர்தன்னை இணையில் சம்பந்தன்
பேசுந் தமிழ்வல்லோர் பெருநீ ருலகத்துப்
பாசந் தனையற்றுப் பழியில் புகழாரே. | 1.81.11
|