திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருஅச்சிறுபாக்கம் தேவாரத் திருப்பதிகம்

(முதல் திருமுறை 77வது திருப்பதிகம்)

1.77 திருஅச்சிறுபாக்கம்

பண் - குறிஞ்சி

831

பொன்றிரண் டன்ன புரிசடை புரள பொருகடற் பவளமொ டழல்நிறம் புரையக்
குன்றிரண் டன்ன தோளுடை யகலங் குலாயவெண் ணூலொடு கொழும்பொடி யணிவர்
மின்றிரண் டன்ன நுண்ணிடை யரிவை மெல்லிய லாளையோர் பாகமாப் பேணி
அன்றிரண் டுருவ மாயவெம் அடிகள் அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

1.77.1
832

தேனினு மினியர் பாலன நீற்றர் தீங்கரும் பனையர்தந் திருவடி தொழுவார்
ஊன்நயந் துருக உவகைகள் தருவார் உச்சிமே லுறைபவர் ஒன்றலா தூரார்
வானக மிறந்து வையகம் வணங்க வயங்கொள நிற்பதோர் வடிவினை யுடையார்
ஆனையி னுரிவை போர்த்தவெம் மடிகள் அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

1.77.2
833

காரிரு ளுருவ மால்வரை புரையக் களிற்றின துரிவைகொண் டரிவைமே லோடி
நீருரு மகளை நிமிர்சடைத் தாங்கி நீறணிந் தேறுகந் தேறிய நிமலர்
பேரரு ளாளர் பிறவியில் சேரார் பிணியிலர் கேடிலர் பேய்க்கணஞ் சூழ
ஆரிருள் மாலை ஆடுமெம் மடிகள் அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

1.77.3
834

மைம்மலர்க் கோதை மார்பின ரெனவும் மலைமக ளவளொடு மருவின ரெனவும்
செம்மலர்ப் பிறையுஞ் சிறையணி புனலுஞ் சென்னிமே லுடையரெஞ் சென்னிமே லுறைவார்
தம்மல ரடியொன் றடியவர் பரவத் தமிழ்ச்சொலும் வடசொலுந் தாள்நிழற் சேர
அம்மலர்க் கொன்றை யணிந்த வெம்மடிகள் அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

1.77.4
835

விண்ணுலா மதியஞ் சூடின ரெனவும் விரிசடை யுள்ளது வெள்ளநீ ரெனவும்
பண்ணுலாம் மறைகள் பாடின ரெனவும் பலபுக ழல்லது பழியில ரெனவும்
எண்ணலா காத இமையவர் நாளும் ஏத்தர வங்களோ டெழில்பெற நின்ற
அண்ணலா னூர்தி ஏறுமெம் மடிகள் அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

1.77.5
836

நீடிருஞ் சடைமேல் இளம்பிறை துளங்க நிழல்திகழ் மழுவொடு நீறுமெய் பூசித்
தோடொரு காதினிற் பெய்துவெய் தாய சுடலையி லாடுவர் தோலுடை யாகக்
காடரங் காகக் கங்குலும் பகலுங் கழுதொடு பாரிடங் கைதொழு தேத்த
ஆடர வாட ஆடுமெம் மடிகள் அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

1.77.6
837

ஏறுமொன் றேறி நீறுமெய் பூசி இளங்கிளை யரிவையொ டொருங்குட னாகிக்
கூறுமொன் றருளிக் கொன்றையந் தாருங் குளிரிள மதியமுங் கூவிள மலரும்
நாறுமல் லிகையும் எருக்கொடு முருக்கும் மகிழிள வன்னியும் இவைநலம் பகர
ஆறுமோர் சடைமேல் அணிந்த வெம்மடிகள் அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

1.77.7
838

கச்சும்ஒள் வாளுங் கட்டிய வுடையர் கதிர்முடி சுடர்விடக் கவரியுங் குடையும்
பிச்சமும் பிறவும் பெண்ணணங் காய பிறைநுத லவர்தமைப் பெரியவர் பேணப்
பச்சமும் வலியுங் கருதிய வரக்கன் பருவரை யெடுத்ததிண் டோ ள்களை யடர்வித்
தச்சமும் அருளுங் கொடுத்த வெம்மடிகள் அச்சிறு பாக்கம தாட்சி கொண்டாரே.

1.77.8
839

நோற்றலா ரேனும் வேட்டலா ரேனும் நுகர்புகர் சாந்தமோ டேந்திய மாலைக்
கூற்றலா ரேனும் இன்னவா றென்றும் எய்தலா காததோர் இயல்பினை யுடையார்
தோற்றலார் மாலும் நான்முக முடைய தோன்றலும் அடியொடு முடியுறத் தங்கள்
ஆற்றலாற் காணா ராயவெம் மடிகள் அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

1.77.9
840

வாதுசெய் சமணுஞ் சாக்கியப்பேய்கள் நல்வினை நீக்கிய வல்வினை யாளர்
ஓதியுங் கேட்டும் உணர்வினை யிலாதார் உள்கலா காததோர் இயல்பினை யுடையார்
வேதமும் வேத நெறிகளு மாகி விமலவே டத்தொடு கமலமா மதிபோல்
ஆதியும் ஈறும் ஆயவெம் மடிகள் அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

1.77.10
841

மைச்செறி குவளை தவளைவாய் நிறைய மதுமலர்ப் பொய்கையிற் புதுமலர் கிழியப்
பச்சிற வெறிவயல் வெறிகமழ் காழிப் பதியவ ரதிபதி கவுணியர் பெருமான்
கைச்சிறு மறியவன் கழலலாற் பேணாக் கருத்துடை ஞானசம் பந்தன தமிழ்கொண்
டச்சிறு பாக்கத் தடிகளை யேத்தும் அன்புடை யடியவர் அருவினை யிலரே.

1.77.11

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பாக்கபுரேசர், தேவியார் - சுந்தரமாதம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete First thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page