திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருவெங்குரு தேவாரத் திருப்பதிகம்

(முதல் திருமுறை 75வது திருப்பதிகம்)

1.75 திருவெங்குரு

பண் - குறிஞ்சி

809

காலைநன் மாமலர் கொண்டடி பரவிக் கைதொழு மாணியைக் கறுத்தவெங் காலன்
ஓலம திடமுன் உயிரொடு மாள உதைத்தவ னுமையவள் விருப்பனெம் பெருமான்
மாலைவந் தணுக ஓதம்வந் துலவி மறிதிரை சங்கொடு பவளம்முன் உந்தி
வேலைவந் தணையுஞ் சோலைகள் சூழ்ந்த வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.

1.75.1
810

பெண்ணினைப் பாகம் அமர்ந்துசெஞ் சடைமேற் பிறையொடும் அரவினை யணிந் தழகாகப்
பண்ணினைப் பாடி யாடிமுன் பலிகொள் பரமரெம் மடிகளார் பரிசுகள் பேணி
மண்ணினை மூடி வான்முக டேறி மறிதிரை கடல்முகந் தெடுப்பமற் றுயர்ந்து
விண்ணள வோங்கி வந்திழி கோயில் வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.

1.75.2
811

ஓரியல் பில்லா உருவம தாகி ஒண்டிறல் வேடன துருவது கொண்டு
காரிகை காணத் தனஞ்சயன் றன்னைக் கறுத்தவற் களித்துடன் காதல்செய் பெருமான்
நேரிசை யாக அறுபத முரன்று நிரைமலர்த் தாதுகள் மூசவிண் டுதிர்ந்து
வேரிக ளெங்கும் விம்மிய சோலை வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.

1.75.3
812

வண்டணை கொன்றை வன்னியு மத்தம் மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க
கொண்டணி சடையர் விடையினர் பூதங் கொடுகொட்டி குடமுழாக் கூடியு முழவப்
பண்டிகழ் வாகப் பாடியோர் வேதம் பயில்வர்முன் பாய்புனற் கங்கையைச் சடைமேல்
வெண்பிறை சூடி உமையவ ளோடும் வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.

1.75.4
813

சடையினர் மேனி நீறது பூசித் தக்கைகொள் பொக்கண மிட்டுட னாகக்
கடைதொறும் வந்து பலியது கொண்டு கண்டவர் மனமவை கவர்ந் தழகாகப்
படையது ஏந்திப் பைங்கயற் கண்ணி உமையவள் பாகமு மமர்ந்தருள் செய்து
விடையொடு பூதஞ் சூழ்தரச் சென்று வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.

1.75.5
814

கரைபொரு கடலில் திரையது மோதக் கங்குல்வந் தேறிய சங்கமு மிப்பி
உரையுடை முத்தம் மணலிடை வைகி ஓங்குவா னிருளறத் துரப்பவெண் டிசையும்
புரைமலி வேதம் போற்றுபூ சுரர்கள் புரிந்தவர் நலங்கொள்ஆ குதியினில் நிறைந்த
விரைமலி தூபம் விசும்பினை மறைக்கும் வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.

1.75.6
815

வல்லிநுண் ணிடையாள் உமையவள் தன்னை மறுகிட வருமத களிற்றினை மயங்க
ஒல்லையிற் பிடித்தங் குரித்தவள் வெருவல் கெடுத்தவர் விரிபொழில் மிகுதிரு ஆலில்
நல்லற முரைத்து ஞானமோ டிருப்ப நலிந்திட லுற்று வந்தவக் கருப்பு
வில்லியைப் பொடிபட விழித்தவர் விரும்பி வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.

1.75.7
816

பாங்கிலா வரக்கன் கயிலைஅன் றெடுப்பப் பலதலை முடியொடு தோளவை நெரிய
ஓங்கிய விரலால் ஊன்றியன் றவற்கே ஒளிதிகழ் வாளது கொடுத் தழகாய
கோங்கொடு செருந்தி கூவிள மத்தம் கொன்றையுங் குலாவிய செஞ்சடைச் செல்வர்
வேங்கைபொன் மலரார் விரைதரு கோயில் வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.

1.75.8
817

ஆறுடைச் சடையெம் அடிகளைக் காண அரியொடு பிரமனும் அளப்பதற் காகிச்
சேறிடைத் திகழ்வா னத்திடை புக்குஞ் செலவறத் தவிர்ந்தனர் எழிலுடைத் திகழ்வெண்
நீறுடைக் கோல மேனியர் நெற்றிக் கண்ணினர் விண்ணவர் கைதொழு தேத்த
வேறெமை யாள விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.

1.75.9
818

பாடுடைக் குண்டர் சாக்கியர் சமணர் பயில்தரு மறவுரை விட்டழ காக
ஏடுடை மலராள் பொருட்டு வன்தக்கன் எல்லையில் வேள்வியைத் தகர்த்தருள் செய்து
காடிடைக் கடிநாய் கலந்துடன் சூழக் கண்டவர் வெருவுற விளித்து வெய்தாய
வேடுடைக் கோலம் விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.

1.75.10
819

விண்ணியல் விமானம் விரும்பிய பெருமான் வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரை
நண்ணிய நூலன் ஞானச ம்பந்தன் நவின்றயிவ் வாய்மொழி நலம்மிகு பத்தும்
பண்ணியல் பாகப் பத்திமை யாலே பாடியு மாடியும் பயில வல்லார்கள்
விண்ணவர் விமானங் கொடுவர வேறி வியனுல காண்டுவீற் றிருப்பவர் தாமே.

1.75.11

இதுவுஞ் சீகாழிக்குப்பெயர்.

திருச்சிற்றம்பலம்

Back to Complete First thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page