|
787 |
வானார்சோதி மன்னுசென்னி வன்னிபுனங்கொன்றைத்
தேனார்போது தானார்கங்கை திங்களொடுசூடி
மானேர்நோக்கி கண்டங்குவப்ப மாலையாடுவார்
கானூர்மேய கண்ணார்நெற்றி ஆனூர் செல்வரே. | 1.73.1 |
788 |
நீந்தலாகா வெள்ளமூழ்கு நீள்சடைதன்மேலோர்
ஏய்ந்தகோணற் பிறையோடரவு கொன்றையெழிலார
போந்தமென்சொல் இன்பம்பயந்த மைந்தரவர்போலாங்
காந்தள்விம்மு கானூர்மேய சாந்தநீற்றாரே. | 1.73.2
| 789 |
சிறையார்வண்டுந் தேனும்விம்மு செய்யமலர்க்கொன்றை
மறையார்பாட லாடலோடு மால்விடைமேல்வருவார்
இறையார்வந்தென் இல்புகுந்தென் எழில்நலமுங்கொண்டார்
கறையார்சோலைக் கானூர்மேய பிறையார்சடையாரே. | 1.73.3
| 790 |
விண்ணார்திங்கள் கண்ணிவெள்ளை மாலையதுசூடித்
தண்ணாரக்கோ டாமைபூண்டு தழைபுன்சடைதாழ
எண்ணாவந்தென் இல்புகுந்தங் கெவ்வநோய்செய்தான்
கண்ணார்சோலைக் கானூர்மேய விண்ணோர்பெருமானே. | 1.73.4
| 791 |
தார்கொள்கொன்றைக் கண்ணியோடுந் தண்மதியஞ்சூடி
சீர்கொள்பாட லாடலோடு சேடராய்வந்து
ஊர்கள்தோறும் ஐயம்ஏற்றென் னுள்வெந்நோய்செய்தார்
கார்கொள்சோலைக் கானூர்மேய கறைக்கண்டத்தாரே. | 1.73.5
| 792 |
முளிவெள்ளெலும்பு நீறுநூலும் மூழ்குமார்பராய்
எளிவந்தார்போல் ஐயமென்றென் இல்லேபுகுந்துள்ளத்
தெளிவுநாணுங் கொண்டகள்வர் தேறலார்பூவில்
களிவண்டியாழ்செய் கானூர்மேய ஒளிவெண்பிறையாரே. | 1.73.6
| 793 |
மூவாவண்ணர் முளைவெண்பிறையர் முறுவல்செய்திங்கே
பூவார்கொன்றை புனைந்துவந்தார் பொக்கம்பலபேசிப்
போவார்போல மால்செய்துள்ளம் புக்கபுரிநூலர்
தேவார்சோலைக் கானூர்மேய தேவதேவரே. | 1.73.7
| 794 |
தமிழின்நீர்மை பேசித்தாளம் வீணைபண்ணிநல்ல
முழவம்மொந்தை மல்குபாடல் செய்கையிடமோவார்
குமிழின்மேனி தந்துகோல நீர்மையதுகொண்டார்
கமழுஞ்சோலைக் கானூர்மேய பவளவண்ணரே. | 1.73.8
| 795 |
அந்தமாதி அயனுமாலும் ஆர்க்குமறிவரியான்
சிந்தையுள்ளும் நாவின்மேலுஞ் சென்னியுமன்னினான்
வந்தென்னுள்ளம் புகுந்துமாலை காலையாடுவான்
கந்தமல்கு கானூர்மேய எந்தைபெம்மானே. | 1.73.9
| 796 |
ஆமையரவோ டேனவெண்கொம் பக்குமாலைபூண்
டாமோர்கள்வர் வெள்ளர்போல உள்வெந்நோய்செய்தார்
ஓமவேத நான்முகனுங் கோணாகணையானுஞ்
சேமமாய செல்வர்கானூர் மேயசேடரே. | 1.73.10
| 797 |
கழுதுதுஞ்சுங் கங்குலாடுங் கானூர்மேயானைப்
பழுதில்ஞான சம்பந்தன்சொல் பத்தும்பாடியே
தொழுதுபொழுது தோத்திரங்கள் சொல்லித்துதித்துநின்
றழுதுநக்கும் அன்புசெய்வார் அல்லலறுப்பாரே. | 1.73.11
|