திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சர தேவாரத் திருப்பதிகம்

(முதல் திருமுறை 65வது திருப்பதிகம்)

1.65 காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம்

பண் - தக்கேசி

அடையார் தம்புரங்கள் மூன்றும் ஆரழ லில்லழுந்த	
விடையார் மேனிய ராய்ச்சீறும் வித்தகர் மேயவிடம்	
கடையார் மாடம் நீடியெங்குங் கங்குல்புறந் தடவப்	
படையார் புரிசைப் பட்டினஞ்சேர் பல்லவ னீச்சரமே.	1.65.1
	
எண்ணா ரெயில்கள் மூன்றுஞ்சீறும் எந்தைபிரான் இமையோர்	
கண்ணா யுலகங் காக்கநின்ற கண்ணுதல் நண்ணுமிடம்	
மண்ணார் சோலைக் கோலவண்டு வைகலுந்தேன் அருந்திப்	
பண்ணார் செய்யும் பட்டினத்துப் பல்லவ னீச்சரமே.	1.65.2
	
மங்கை யங்கோர் பாகமாக வாள்நில வார்சடைமேல்	
கங்கை யங்கே வாழவைத்த கள்வன் இருந்தஇடம்	
பொங்க யஞ்சேர் புணரியோத மீதுயர் பொய்கையின்மேல்	
பங்க யஞ்சேர் பட்டினத்துப் பல்லவ னீச்சரமே.	1.65.3
	
தாரார் கொன்றை பொன்தயங்கச் சாத்திய மார்பகலம்	
நீரார் நீறு சாந்தம்வைத்த நின்மலன் மன்னுமிடம்	
போரார் வேற்கண் மாதர்மைந்தர் புக்கிசை பாடலினாற்	
பாரார் கின்ற பட்டினத்துப் பல்லவ னீச்சரமே.	1.65.4
	
மைசேர் கண்டர் அண்டவாணர் வானவ ருந்துதிப்ப	
மெய்சேர் பொடியர் அடியாரேத்த மேவி இருந்தவிடங்	
கைசேர் வளையார் விழைவினோடு காதன்மை யாற்கழலே	
பைசே ரரவார் அல்குலார்சேர் பல்லவ னீச்சரமே.	1.65.5
	
குழலி னோசை வீணைமொந்தை கொட்ட முழவதிரக்	
கழலி னோசை யார்க்கஆடுங் கடவு ளிருந்தவிடஞ்	
சுழியி லாருங் கடலிலோதந் தெண்டிரை மொண்டெறியப்	
பழியி லார்கள் பயில்புகாரிற் பல்லவ னீச்சரமே.	1.65.6
	
வெந்த லாய வேந்தன்வேள்வி வேரறச் சாடிவிண்ணோர்	
வந்தெ லாமுன் பேணநின்ற மைந்தன் மகிழ்ந்தஇடம்	
மந்த லாய மல்லிகையும் புன்னை வளர்குரவின்	
பந்தலாரும் பட்டினத்துப் பல்லவ னீச்சரமே.	1.65.7
	
தேரரக்கன் மால்வரையைத் தெற்றி யெடுக்கஅவன்	
தாரரக்குந் திண்முடிகள் ஊன்றிய சங்கரனூர்	
காரரக்குங் கடல்கிளர்ந்த காலமெ லாமுணரப்	
பாரரக்கம் பயில்புகாரில் பல்லவ னீச்சரமே.	1.65.8
	
அங்க மாறும் வேதநான்கும் ஓதும் அயன்நெடுமால்	
தங்க ணாலும் நேடநின்ற சங்கரன் தங்குமிடம்	
வங்க மாரும் முத்தம்இப்பி வார்கட லூடலைப்பப்	
பங்கமில்லார் பயில்புகாரிற் பல்லவ னீச்சரமே.	1.65.9
	
உண்டுடுக்கை யின்றியேநின் றூர்நக வேதிரிவார்	
கண்டுடுக்கை மெய்யிற்போர்த்தார் கண்டறி யாதவிடந்	
தண்டுடுக்கை தாளந்தக்கை சார நடம்பயில்வார்	
பண்டிடுக்கண் தீரநல்கும் பல்லவ னீச்சரமே.	1.65.10
	
பத்த ரேத்தும் பட்டினத்துப் பல்லவ னீச்சரத்தெம்	
அத்தன் தன்னை அணிகொள்காழி ஞானசம்பந்தன்சொல்	
சித்தஞ் சேரச் செப்புமாந்தர் தீவினை நோயிலராய்	
ஒத்த மைந்த உம்பர்வானில் உயர்வினொ டோங்குவரே.	1.65.11

	   - திருச்சிற்றம்பலம் -

 • இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
  சுவாமிபெயர் - பல்லவனேசர்; தேவியார் - சவுந்தராம்பிகையம்மை.

  Back to Complete First thirumuRai Index

  Back to ThirumuRai Main Page
  Back to thamizh shaivite literature Page
  Back to Shaiva Sidhdhantha Home Page
  Back to Home Page