|
656 |
நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாடோ றும்
முறைகொண்டு நின்றடியார் முட்டாமே பணிசெய்யச்
சிறைகொண்ட வண்டறையுஞ் செங்காட்டங் குடியதனுள்
கறைகொண்ட கண்டத்தான் கணபதீச் சரத்தானே. | 1.61.1 |
657 |
வாரேற்ற பறையொலியுஞ் சங்கொலியும் வந்தியம்ப
ஊரேற்ற செல்வத்தோ டோ ங்கியசீர் விழவோவாச்
சீரேற்ற முடைத்தாய செங்காட்டங் குடியதனுள்
காரேற்ற கொன்றையான் கணபதீச் சரத்தானே. | 1.61.2
| 658 |
வரந்தையான் சோபுரத்தான் மந்திரத்தான் தந்திரத்தான்
கிரந்தையான் கோவணத்தான் கிண்கிணியான் கையதோர்
சிரந்தையான் செங்காட்டங் குடியான்செஞ் சடைசேருங்
கரந்தையான் வெண்ணீற்றான் கணபதீச் சரத்தானே. | 1.61.3
| 659 |
தொங்கலுங் கமழ்சாந்தும் அகிற்புகையுந் தொண்டர்கொண்
டங்கையால் தொழுதேத்த அருச்சுனற்கன் றருள்செய்தான்
செங்கயல்பாய் வயலுடுத்த செங்காட்டங் குடியதனுள்
கங்கைசேர் வார்சடையான் கணபதீச் சரத்தானே. | 1.61.4
| 660 |
பாலினால் நறுநெய்யாற் பழத்தினாற் பயின்றாட்டி
நூலினால் மணமாலை கொணர்ந்தடியார் புரிந்தேத்தச்
சேலினார் வயல்புடைசூழ் செங்காட்டங் குடியதனுள்
காலினாற் கூற்றுதைத்தான் கணபதீச் சரத்தானே. | 1.61.5
| 661 |
நுண்ணியான் மிகப்பெரியான் ஓவுளார் வாயுளான்
தண்ணியான் வெய்யான்நந் தலைமேலான் மனத்துளான்
திண்ணியான் செங்காட்டங் குடியான்செஞ் சடைமதியக்
கண்ணியான் கண்ணுதலான் கணபதீச் சரத்தானே. | 1.61.6
| 662 |
மையினார் மலர்நெடுங்கண் மலைமகளோர் பாகமாம்
மெய்யினான் பையரவம் அரைக்கசைத்தான் மீன்பிறழச்
செய்யினார் தண்கழனிச் செங்காட்டங் குடியதனுள்
கையினார் கூரெரியான் கணபதீச் சரத்தானே. | 1.61.7
| 663 |
தோடுடையான் குழையுடையான் அரக்கன்றன் தோளடர்த்த
பீடுடையான் போர்விடையான் பெண்பாகம் மிகப்பெரியான்
சேடுடையான் செங்காட்டாங் குடியுடையான் சேர்ந்தாடுங்
காடுடையான் நாடுடையான் கணபதீச் சரத்தானே. | 1.61.8
| 664 |
ஆனூரா வுழிதருவான் அன்றிருவர் தேர்ந்துணரா
வானூரான் வையகத்தான் வாழ்த்துவார் மனத்துளான்
தேனூரான் செங்காட்டாங் குடியான்சிற் றம்பலத்தான்
கானூரான் கழுமலத்தான் கணபதீச் சரத்தானே. | 1.61.9
| 665 |
செடிநுகருஞ் சமணர்களுஞ் சீவரத்த சாக்கியரும்
படிநுகரா தயருழப்பார்க் கருளாத பண்பினான்
பொடிநுகருஞ் சிறுத்தொண்டர்க் கருள்செய்யும் பொருட்டாகக்
கடிநகராய் வீற்றிருந்தான் கணபதீச் சரத்தானே. | 1.61.10
| 666 |
கறையிலங்கு மலர்க்குவளை கண்காட்டக் கடிபொழிலின்
நறையிலங்கு வயல்காழித் தமிழ்ஞான சம்பந்தன்
சிறையிலங்கு புனற்படப்பைச் செங்காட்டங் குடிசேர்த்தும்
மறையிலங்கு தமிழ்வல்லார் வானுலகத் திருப்பாரே. | 1.61.11
|