திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருத்தூங்கானைமாட தேவாரத் திருப்பதிகம்

(முதல் திருமுறை 59வது திருப்பதிகம்)

1.59 திருத்தூங்கானைமாடம்

பண் - பழந்தக்கராகம்

ஒடுங்கும் பிணிபிறவி கேடென்றிவை	
  யுடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம்	
அடங்கும் மிடங்கருதி நின்றீ ரெல்லாம்	
  அடிக ளடிநிழற்கீ ழாளாம் வண்ணம்	
கிடங்கும் மதிலுஞ் சுலாவியெங்குங்	
  கெழுமனைகள் தோறும் மறையின்னொலி	
தொடங்குங் கடந்தைத் தடங்கோயில்சேர்	
  தூங்கானை மாடம் தொழுமின்களே.	1.59.1
	
பிணிநீர சாதல் பிறத்தலிவை	
  பிரியப் பிரியாத பேரின்பத்தோ	
டணிநீர மேலுலகம் எய்தலுறில்	
  அறிமின் குறைவில்லை ஆனேறுடை	
மணிநீல கண்டம் உடையபிரான்	
   மலைமகளுந் தானுந் மகிழ்ந்துவாழும்	
துணிநீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர்	
  தூங்கானை மாடம் தொழுமின்களே.	1.59.2
	
சாநாளும் வாழ்நாளுந் தோற்றமிவை	
  சலிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்	
ஆமா றறியா தலமந்துநீர்	
  அயர்ந்துங் குறைவில்லை ஆனேறுடைப்	
பூமாண் அலங்கல் இலங்குகொன்றை	
  புனல்பொதிந்த புன்சடையி னான்உறையும்	
தூமாண் கடந்தைத் தடங்கோயில்சேர்	
  தூங்கானை மாடம் தொழுமின்களே.	1.59.3
	
ஊன்றும் பிணிபிறவி கேடென்றிவை	
  யுடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம்	
மான்று மனங்கருதி நின்றீரெல்லாம்	
  மனந்திரிந்து மண்ணில் மயங்காதுநீர்	
மூன்று மதிலெய்த மூவாச்சிலை	
  முதல்வர்க் கிடம்போலும் முகில்தோய்கொடி	
தோன்றுங் கடந்தைத் தடங்கோயில்சேர்	
  தூங்கானை மாடம் தொழுமின்களே.	1.59.4
	
மயல்தீர்மை யில்லாத தோற்றம்மிவை	
  மரணத்தொ டொத்தழியு மாறாதலால்	
வியல்தீர மேலுலக மெய்தலுறின்	
  மிக்கொன்றும் வேண்டா விமலனிடம்	
உயர்தீர வோங்கிய நாமங்களா	
  லோவாது நாளும் அடிபரவல்செய்	
துயர்தீர் கடந்தைத் தடங்கோயில்சேர்	
  தூங்கானை மாடம் தொழுமின்களே.	1.59.5
	
பன்னீர்மை குன்றிச் செவிகேட்பிலா	
  படர்நோக்கிற் கண் பவளந்நிற	
நன்னீர்மை குன்றித் திரைதோலொடு	
  நரைதோன்றுங் காலம் நமக்காதல்முன்	
பொன்னீர்மை துன்றப் புறந்தோன்றுநற்	
  புனல்பொதிந்த புன்சடையி னான்உறையும்	
தொன்னீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர்	
  தூங்கானை மாடம் தொழுமின்களே.	1.59.6
	
இறையூண் துகளோ டிடுக்கண் எய்தி	
  யிழிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்	
நிறையூண் நெறிகருதி நின்றீரெல்லாம்	
  நீள்கழ லேநாளும் நினைமின் சென்னிப்	
பிறைசூ ழலங்கல் இலங்குகொன்றை	
  பிணையும் பெருமான் பிரியாத நீர்த்	
துறைசூழ் கடந்தைத் தடங்கோயில்சேர்	
  தூங்கானை மாடம் தொழுமின்களே.	1.59.7
	
பல்வீழ்ந்து நாத்தளர்ந்து மெய்யில்வாடிப்	
  பழிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்	
இல்சூ ழிடங்கருதி நின்றீரெல்லாம்	
  இறையே பிரியா தெழுந்து போதும்	
கல்சூ ழரக்கன் கதறச்செய்தான்	
  காதலி யுந்தானுங் கருதிவாழும்	
தொல்சீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர்	
  தூங்கானை மாடம் தொழுமின்களே.	1.59.8
	
நோயும் பிணியும் அருந்துயரமும்	
  நுகருடைய வாழ்க்கை யொழியத்தவம்	
வாயும் மனங்கருதி நின்றீரெல்லாம்	
  மலர்மிசைய நான்முகனும் மண்ணும்விண்ணும்	
தாய அடியளந்தான் காணமாட்டாத்	
  தலைவர்க் கிடம்போலுந் தண்சோலைவிண்	
தோயுங் கடந்தைத் தடங்கோயில்சேர்	
  தூங்கானை மாடம் தொழுமின்களே.	1.59.9
	
பகடூர்பசி நலிய நோய்வருதலாற்	
  பழிப்பாய வாழ்க்கை யொழியத் தவம்	
முகடூர் மயிர்கடிந்த செய்கையாரும்	
  மூடுதுவ ராடையரும் நாடிச்சொன்ன	
திகழ்தீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா	
  திருந்திழை யுந்தானும் பொருந்திவாழும்	
துகள்தீர் கடந்தைத் தடங்கோயில்சேர்	
  தூங்கானை மாடம் தொழுமின்களே.	1.59.10
	
மண்ணார் முழவதிரும் மாடவீதி	
  வயற்காழி ஞானசம் பந்தன்நல்ல	
பெண்ணா கடத்துப் பெருங்கோயில்சேர்	
  பிறையுரிஞ்சுந் தூங்கானை மாடமேயான்	
கண்ணார் கழல்பரவு பாடல் பத்துங்	
  கருத்துணரக் கற்றாருங் கேட்டாரும்போய்	
விண்ணோ ருலகத்து மேவிவாழும்	
  விதியது வேயாகும் வினைமாயுமே.	1.59.11

	    - திருச்சிற்றம்பலம் -
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுடர்க்கொழுந்தீசர், தேவியார் - கடந்தைநாயகியம்மை.


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page