|
591 |
ஊறி யார்தரு நஞ்சினை யுண்டுமை
நீறு சேர்திரு மேனியர்
சேறு சேர்வயல் தென்திரு மாற்பேற்றின்
மாறி லாமணி கண்டரே. | 1.55.1 |
592 |
தொடையார் மாமலர் கொண்டிரு போதும்மை
அடைவா ராமடி கள்ளென
மடையார் நீர்மல்கு மன்னிய மாற்பே
றுடையீ ரேயுமை யுள்கியே. | 1.55.2
| 593 |
பையா ரும்மர வங்கொடு வாட்டிய
கையா னென்று வணங்குவர்
மையார் நஞ்சுண்டு மாற்பேற் றிருக்கின்ற
ஐயா நின்னடி யார்களே. | 1.55.3
| 594 |
சால மாமலர் கொண்டு சரணென்று
மேலை யார்கள் விரும்புவர்
மாலி னார்வழி பாடுசெய் மாற்பேற்று
நீல மார்கண்ட நின்னையே. | 1.55.4
| 595 |
மாறி லாமணி யேயென்று வானவர்
ஏற வேமிக ஏத்துவர்
கூற னேகுல வுந்திரு மாற்பேற்றின்
நீற னேயென்று நின்னையே. | 1.55.5
| 596 |
உரையா தாரில்லை யொன்றுநின் தன்மையைப்
பரவா தாரில்லை நாள்களும்
திரையார் பாலியின் தென்கரை மாற்பேற்
றரையா னேயருள் நல்கிடே. | 1.55.6
| |
(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் மறைந்து போயிற்று. | 1.55.7
| 597 |
அரச ளிக்கும் அரக்கன் அவன்றனை
உரைகெ டுத்தவன் ஒல்கிட
வரமி குத்தவெம் மாற்பேற் றடிகளைப்
பரவி டக்கெடும் பாவமே. | 1.55.8
| 598 |
இருவர் தேவருந் தேடித் திரிந்தினி
ஒருவ ராலறி வொண்ணிலன்
மருவு நீள்கழல் மாற்பேற் றடிகளைப்
பரவு வார்வினை பாறுமே. | 1.55.9
| 599 |
தூசு போர்த்துழல் வார்கையில் துற்றுணும்
நீசர் தம்முரை கொள்ளெலுந்
தேசம் மல்கிய தென்திரு மாற்பேற்றின்
ஈச னென்றெடுத் தேத்துமே. | 1.55.10
| 600 |
மன்னி மாலொடு சோமன் பணிசெயும்
மன்னும் மாற்பேற் றடிகளை
மன்னு காழியுள் ஞானசம் பந்தன்சொல்
பன்ன வேவினை பாறுமே. | 1.55.11
|