திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(முதல் திருமுறை)

1.53 திருமுதுகுன்றம்


பண் - பழந்தக்கராகம்

570

தேவராயும் அசுரராயுஞ் சித்தர் செழுமறைசேர்
நாவராயும் நண்ணுபாரும் விண்ணெரி கால்நீரும்
மேவராய விரைமலரோன் செங்கண்மால் ஈசனென்னும்
மூவராய முதலொருவன் மேயது முதுகுன்றே.

1.53.1
571

பற்றுமாகி வானுளோர்க்குப் பல்கதி ரோன்மதிபார்
எற்றுநீர்தீக் காலுமேலை விண்ணிய மானனொடு
மற்றுமாதோர் பல்லுயிராய் மாலய னும்மறைகள்
முற்றுமாகி வேறுமானான் மேயது முதுகுன்றே.

1.53.2
572

வாரிமாகம் வைகுதிங்கள் வாளர வஞ்சூடி
நாரிபாகம் நயந்துபூமேல் நான்முகன் றன்றலையில்
சீரிதாகப் பலிகொள்செல்வன் செற்றலுந் தோன்றியதோர்
மூரிநாகத் துரிவைபோர்த்தான் மேயது முதுகுன்றே.

1.53.3
573

பாடுவாருக் கருளுமெந்தை பனிமுது பௌவமுந்நீர்
நீடுபாரும் முழுதுமோடி அண்டர் நிலைகெடலும்
நாடுதானும் ஊடுமோடி ஞாலமும் நான்முகனும்
ஊடுகாண மூடும்வெள்ளத் துயர்ந்தது முதுகுன்றே.

1.53.4
574

வழங்குதிங்கள் வன்னிமத்தம் மாசுணம் மீசணவிச்
செழுங்கல்வேந்தன் செல்விகாணத் தேவர் திசைவணங்கத்
தழங்குமொந்தை தக்கைமிக்க பேய்க்கணம் பூதஞ்சூழ
முழங்குசெந்தீ யேந்தியாடி மேயது முதுகுன்றே.

1.53.5
575

சுழிந்தகங்கை தோய்ந்ததிங்கள் தொல்லரா நல்லிதழி
சழிந்தசென்னி சைவவேடந் தானினைத் தைம்புலனும்
அழிந்தசிந்தை அந்தணாளர்க் கறம்பொரு ளின்பம்வீடு
மொழிந்தவாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே.

1.53.5
*இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.1.53.6
576

மயங்குமாயம் வல்லராகி வானி னொடுநீரும்
இயங்குவோருக் கிறைவனாய இராவணன் தோள்நெரித்த
புயங்கராக மாநடத்தன் புணர்முலை மாதுமையாள்
முயங்குமார்பன் முனிவரேத்த மேயது முதுகுன்றே.

1.53.8
577

ஞாலமுண்ட மாலுமற்றை நான்முக னும்மறியாக்
கோலமண்டர் சிந்தைகொள்ளா ராயினுங் கொய்மலரால்
ஏலஇண்டை கட்டிநாமம் இசையஎப் போதுமேத்தும்
மூலமுண்ட நீற்றர்வாயான் மேயது முதுகுன்றே.

1.53.9
578

உறிகொள்கையர் சீவரத்தர் உண்டுழல் மிண்டர்சொல்லை
நெறிகளென்ன நினைவுறாதே நித்தலுங் கைதொழுமின்
மறிகொள்கையன் வங்கமுந்நீர் பொங்கு விடத்தையுண்ட
முறிகொள்மேனி மங்கைபங்கன் மேயது முதுகுன்றே.

1.53.10
579

மொய்த்துவானோர் பல்கணங்கள் வணங்கும் முதுகுன்றை
பித்தர்வேடம் பெருமையென்னும் பிரமபுரத் தலைவன்
.... .... .... .... .... .... .... ....
.... .... .... .... .... .... .... ....

1.53.11
(*) 11-ம் செய்யுளின் பின்னிரண்டடிகள் சிதைந்து போயின.

திருச்சிற்றம்பலம்
Back to Complete First thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page